தேர்தலில் வெற்றிபெற எத்தனை வீரர்களை பலி கொடுக்கப் போகிறீர்கள்: மத்திய அரசுக்கு கேஜரிவால் கேள்வி

வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற இன்னும் எத்தனை ராணுவ வீரர்களைப் பலி கொடுக்கப் போகிறீர்கள் என்று தில்லி

வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற இன்னும் எத்தனை ராணுவ வீரர்களைப் பலி கொடுக்கப் போகிறீர்கள் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் ஏ முகமது தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படையினர் செவ்வாய்கிழமை அதிகாலை தாக்கி அழித்தனர். அதைத் தொடர்ந்து, புதன்கிழமை இந்திய விமானம் ஒன்றை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதுடன், தமிழகத்தைச் சேர்ந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது. அவரை மீட்க வேண்டும் என்று தேசம் முழுவதும் கோரிக்கை வலுத்தது.
இந்நிலையில், இது தொடர்பாகக் கருத்து தெரிவித்திருந்த கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, "புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி அழித்துள்ளனர். இதனால், நாடு முழுவதும் பிரதமர் மோடியின் அலை மீண்டும் வீச தொடங்கியுள்ளது. இதன் மூலம் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் 22 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்' என்று கூறி இருந்தார்.
எடியூரப்பாவின் இக்கருத்துக்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பாகிஸ்தான் ஆளும் கட்சியான தெஹ்ரிக் இன்சாப் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தில்லி சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஆம்ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், எடியூரப்பாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துப் பேசினார். அவர் பேசியதாவது: 
இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையில் தோன்றியுள்ள பதற்றத்தை அரசியல் ஆதாயத்துக்குக்காகப் பாஜக பயன்படுத்துகிறது. 40 வீரர்களைப் பலி கொடுத்துள்ளோம். அதனால், 22 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என்று எடியூரப்பா பேசியுள்ளார். மக்களவைத் தேர்தலில் 300 இடங்களில் வெற்றி பெற இன்னும் எத்தனை வீரர்களை உயிர்த் தியாகம் செய்ய வைக்கப் போகிறீர்கள்? எத்தனை பெண்களை விதவையாக்கப் போகிறீர்கள்? எத்தனை வீரர்களின் குடும்பங்களை அழிக்கப் போகிறீர்கள்?
பாஜக போன்ற கட்சியையும், அரசையும் நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது. பாகிஸ்தானுடன் பதற்றமான சூழல் நிலவும் போது, பிரதமர் மோடி, பாஜக தொண்டர்களுடன் காணொலிக் காட்சியின் மூலம் பேசுவதைத் பொறுத்துக் கொள்ள முடியாது. பாஜக சீட்டுகளையும், பிணங்களையும் எண்ணி வருகிறது என்றார் கேஜரிவால்.

பாஜக கண்டனம்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பாகிஸ்தானின் மொழியில் பேசுகிறார் என்று தில்லி பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாகிஸ்தானுக்கு சார்பாக பாகிஸ்தானின் மொழியில் கேஜரிவால் பேசி வருகிறார். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் முகவர் போல அவர் நடந்து கொள்கிறார். நமது வீரர்களின் தியாகத்தைக் கொச்சைப் படுத்தும் கேஜரிவாலுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் தில்லி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்' என்றார்.

எடியூரப்பா மறுப்பு
கேஜரிவாலின் பேச்சைத் தொடர்ந்து, தன்னுடைய பேச்சு திரித்து கூறப்பட்டுள்ளதாகவும், தான் அவ்வாறு பேசவில்லை என்றும் எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது சுட்டுரையில், "நான் கூறியது தவறாக திரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பாஜகவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது என்றும், கர்நாடகத்தில் 22 மக்களவைத் தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் என்றும் பல தடவை கூறியிருந்தேன். அதைத்தான் இப்போதும் கூறினேன். அது தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com