கிரீன் பார்க், அதிச்சினி, லாஜ்பத் நகரில் தானியங்கி கோபுர வாகன நிறுத்தும் மையம்: தெற்கு தில்லி மாநகராட்சி திட்டம்

தில்லி சந்தைப் பகுதிகளில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் கிரீன்பார்க், அதிச்சினி, லாஜ்பத் நகர்

தில்லி சந்தைப் பகுதிகளில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் கிரீன்பார்க், அதிச்சினி, லாஜ்பத் நகர் ஆகிய பகுதிகளில் தானியங்கி கோபுர வாகன நிறுத்தும் மையங்களை அமைக்க தெற்கு தில்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மேலும், 400-க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தும் வகையிலான இந்த வாகன நிறுத்தும் மைய கட்டுமானத் திட்டப் பணிகள் 6 முதல் 12 மாதங்களில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு தில்லி மாநகராட்சி ஆணையர் புனித் கோயல் கூறியதாவது: 
இந்தத் தானியங்கி கோபுர வாகன நிறுத்தும் மையம் பிரத்யேக வடிவமைப்பில் கட்டப்பட உள்ளது. அதாவது, குறைந்த அளவிலான இடத்தில் அதிக வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும், மின் தூக்கிகள் மூலம் வாகனங்கள் மேலே தூக்கிச் செல்லப்பட்டு நிறுத்தப்படுவதால் சாய்வுப் பாதைகள் நடை பாதைகள் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான அவசியம் ஏற்படாது. இரும்புச் சாமான்கள் மூலம் வாகனங்கள் நிறுத்தும் மையக் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படும். இதனால், அவற்றைத் தேவைப்படும் போது பிரித்தெடுத்து வேறு இடங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். 
இந்த அமைப்புகள் எளிதில் தீப்பற்றக் கூடியவை அல்ல. இதில், பாதுகாப்பு அம்சமும் அடங்கியுள்ளது. தானியங்கி கோபுர வாகன நிறுத்தும் மையங்களில் பொதுமக்கள் மூன்று நிமிடத்திற்குள்ளாகவே தங்களது வாகனங்களை எளிதாக நிறுத்திவிட்டுச் செல்ல முடியும்.
கிரீன் பார்க் பகுதியில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தானியங்கி கோபுர வாகன நிறுத்தும் மையம் மூன்று அடுக்குகளாக அமைக்கப்பட உள்ளன . இங்கு ஒரே நேரத்தில் சுமார்107 கார்களை நிறுத்தலாம். இந்த மையத்தை செயல்படுத்தி பராமரிக்கும் பொறுப்பு தனியார் நிறுவனம் மேற்கொள்ளும். 
சந்தைப் பகுதிகள், நெரிசல் மிகுந்த குடியிருப்புப் பகுதிகள் ஆகியவற்றில் செங்குத்தான வாகன நிறுத்தும் மையங்கள் அமைக்கப்படுவது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வழக்கமான வாகன நிறுத்த மையங்களில் ஒரு வாகனத்தை நிறுத்துவதற்கு 30 சதுர மீட்டர் தேவைப்படுகிறது. ஆனால், செங்குத்தான வாகன நிறுத்தும் மையங்களில் வாகனத்தை நிறுத்த வெறும் 1.5 சதுர மீட்டர் அளவு போதுமானதாகும் என்றார் அவர்.
தெற்கு தில்லி மாநகராட்சி மேயர் நரேந்திர சாவ்லா கூறுகையில் "இதுபோன்ற தானியங்கி கோபுர வாகன நிறுத்தும் மையங்களை மாநகராட்சியின் பிற பகுதிகளிலும் அமைப்பதற்கு திட்டமிட்டு வருகிறோம். 
இதுபோன்ற வாகன நிறுத்தும் மையங்கள் குடியிருப்புவாசிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பது மட்டுமின்றி, வாகன நிறுத்தும் மையங்களில் நிகழும் மோதலையும் தவிர்ப்பதற்கு உதவியாக இருக்கும். தானியங்கி கோபுர வாகன நிறுத்தும் மையங்களில் வாகனத்தை நிறுத்தியவுடன் ஒரு குறியீடு எண் வழங்கப்படும். அதன் மூலம் வாகனத்தின் ஓட்டுநர், வாகனத்தை பின்னர் எடுத்துச் செல்ல முடியும்' என்றார்.
கிரீன் பார்க், லாஜ்பத் நகர், அதிச்சினி உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 44.50 கோடியில் தானியங்கி கோபுர வாகன நிறுத்தும் மையங்களைக் கட்டமைக்க தெற்கு தில்லி மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 
சரோஜினி நகர், கமலா மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தெற்கு தில்லி மாநகராட்சி நிர்வாகம் ஏற்கெனவே தானியங்கி வாகன நிறுத்தும் மையங்களை அமைத்திருந்தது. கிரீன் பார்க் பகுதியில் புதிதாக தானியங்கி கோபுர வாகன நிறுத்தும் மையத்துக்க்கான அடிக்கல் சனிக்கிழமை நாட்டப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com