தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டால் "தேசவிரோதி' முத்திரை
By DIN | Published On : 04th March 2019 06:00 AM | Last Updated : 04th March 2019 06:00 AM | அ+அ அ- |

பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதன் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்புபவர்களை தேசவிரோதிகள் என முத்திரை குத்துவது, அவர்களை வாயடைக்கும் செயல் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் உண்மைத் தன்மை குறித்து கேள்வி எழுப்புவோர், தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். இது, கேள்வியெழுப்புவோரை மடக்கும் முயற்சியாகும்.
மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகள், ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தில் உள்ள குளறுபடிகள், வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னை என முக்கியப் பிரச்னைகள் குறித்து பேசாமல், பயங்கரவாத தாக்குதலைப் பற்றி மட்டும் பேசுவதில் எதிர்க்கட்சிகளின் கவனம் முற்றிலும் திசை மாறிவிடக் கூடாது.
ஒரு சம்பவம் குறித்து அரசுத் தரப்பு தெளிவில்லாத விவரங்களைத் தரும்போது, அந்தச் சம்பவத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது என்று அந்தப் பதிவில் மெஹபூபா முஃப்தி குறிப்பிட்டுள்ளார்.