மைனர் சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்திய வழக்கு: 100 மரக்கன்றுகளை நட தம்பதிக்கு உத்தரவு

மைனர் சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்திய விவகாரத்தில் தில்லியைச் சேர்ந்த தம்பதியர் மீதான வழக்கை

மைனர் சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்திய விவகாரத்தில் தில்லியைச் சேர்ந்த தம்பதியர் மீதான வழக்கை ரத்து செய்ய தில்லி உயர்நீதிமன்றம் சம்மதித்தது. அதேவேளையில், தம்பதியர் இருவரும் நூறு மரக்கன்றுகளை நடவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த முகவர்கள் இருவரும், மரக்கன்றுகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபடவும், பாதிக்கப்பட்ட மைனர் சிறுமிக்கு இருவரும் தலா ரூ.10 ஆயிரம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு விவரம்: தில்லியைச் சேர்ந்த தம்பதி, மைனர் சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்தியதாகவும் அப்போது அச்சிறுமிக்கு ஊதியம் தராமல் அறையில் அடைத்து வைத்து உடல்ரீதியாக கொடுமைப்படுத்தியதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 
இதுதொடர்பாக தில்லியில் ரஜௌரி கார்டன் காவல் நிலைய போலீஸார் சம்பந்தப்பட்ட தம்பதியர் மீதும் , சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்துவதற்கு முகவர்களாக செயல்பட்ட இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இந்த விவகாரம் குழந்தைகள் நலக் குழு முன் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சிறுமிக்கு தம்பதியர், உரிய ஊதியம், இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை தில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த சிறுமி அவரது தந்தை சம்மதத்தின் பேரில் தில்லிக்கு வேலைக்கு அழைத்து வரப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி நஜ்மி வாஸிரி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ. 1.50 லட்சம் இழப்பீடு வழங்கும் பட்சத்தில் குற்றம்சாட்டப்பட்ட தம்பதியர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. சட்டம், ஒழுங்கு பராமரிப்பில் ஈடுபட்டுள்ள நிர்வாக இயந்திரத்தின் மீது தேவையற்ற சுமையை அளிக்கக் காரணமாக இருந்ததாக வேதனைப்படுவதாக சம்பந்தப்பட்ட தம்பதி இருவரும் கூறி, தாங்கள் சில சமூகப் பணியில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளனர்.
எனவே, அவர்கள் இருவரும் தில்லியில் தலா 50 மரக்கன்றுகளை நட வேண்டும். அதுதொடர்பான விவரத்தை தெற்கு துணை வனப் பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். அவர் அதை மேற்பார்வையிட வேண்டும். எத்தகைய மரக்கன்றுகளை நடலாம் என்பதை வனப் பாதுகாப்பு அதிகாரி பரிசீலித்து அறிவுறுத்த வேண்டும். 
அதேபோன்று சிறுமியை துயரத்துக்குள்ளாக்கியதாக வேதனையை வெளிப்படுத்திய முகவர்கள் இருவரும் அந்த மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகளை பின்பற்றும் வகையில் உரிய புகைப்படங்களுடன் மார்ச் 25-ஆம் தேதி துணை வனப் பாதுகாவலர் நீதிமன்றத்தில் அறிக்கையாக அளிக்க வேண்டும் என்று உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com