ரூ.12,000 கோடியில் தில்லி - ஆக்ரா - பிரயாக்ராஜ் நீர்வழித் திட்டம்: உலக வங்கியிடம் விரைவில் அறிக்கை தாக்கல்

ரூ.12,000 கோடி மதிப்பீட்டிலான தில்லி - ஆக்ரா - பிரயாக்ராஜ் நீர்வழித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும்

ரூ.12,000 கோடி மதிப்பீட்டிலான தில்லி - ஆக்ரா - பிரயாக்ராஜ் நீர்வழித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அது விரைவில் உலக வங்கியிடம் தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
தெற்கு தில்லி மாநகராட்சி சார்பில்  தில்லி கிரீன் பார்க்கில் முழுவதும் தானாகவே இயங்கக் கூடிய கோபுர வாகன நிறுத்தும் மையம் அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை மாலையில் நடைபெற்றது. அடிக்கல்லை நாட்டி  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:
தில்லி முதல் ஆக்ரா வரையில் யமுனை நதி மூலம் நீர் வழித்தடத்தை மேம்படுத்த வேண்டும் என்பது தொலை நோக்குத் திட்டமாகும். இந்த நீர்வழிப் பயணத்தின் மூலம் பொதுமக்கள் ஆக்ராவில் உள்ள தாஜ் மகாலைப் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுகிறேன். இந்த நீர்வழித்தடம் அமைக்கப்படுவதன் மூலம், மக்கள் யமுனை வழியாக தில்லி -–ஆக்ரா மற்றும் ஆக்ரா - பிரயாக்ராஜ் செல்ல முடியும். இதற்காக ரூ.12,000 கோடியில்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் உலக வங்கியிடம் தாக்கல் செய்யப்படும்.
வாகனங்கள் நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், இங்கு தானியங்கி கோபுர வாகன நிறுத்தும் மையம் அமைக்கப்படவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் இப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவதில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். இதற்காக தெற்கு தில்லி மாநகராட்சிக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டில் ரூ.50,000 கோடியில் ஏராளமான நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தை தெற்கு தில்லி மாநகராட்சி திறம்பட செயல்படுத்த வேண்டும். தில்லியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு தில்லியில் பல்வேறு சாலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் நிதின் கட்கரி.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்பி மீனாட்சி லேகி பேசுகையில், "வாகனங்களை நிறுத்துவதில் நிலவும் பிரச்னைகள்தான் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. வாகனங்களைக் தாறுமாறாக நிறுத்துவதாலும், அதன் மூலம் ஏற்படும் தகராறுகளும் தில்லி காவல் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், இப்போது இங்கு அமைக்கப்படவுள்ள தானியங்கி வாகன நிறுத்தும் மையம் மூலம் இந்தப் பிரச்னை குறையும்' என்றார்.
தெற்கு தில்லி மாநகராட்சி மேயர் நரேந்தர் குமார் செளலாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அவர் பேசுகையில், "பாகிஸ்தான் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பிய இந்திய விமானப் படை விமானி அபிநந்தனின் வீரம், தன்னம்பிக்கை ஆகியவற்றை நினைத்து தேசமே பெருமை கொள்கிறது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com