சுடச்சுட

  

  ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கு: அவசரமாக விசாரிக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

  By DIN  |   Published on : 16th March 2019 07:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தல் வேட்பு மனு ஏ, பி படிவங்களில்  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) ஆகியோர் கையெழுத்திட தடை கோரி அக்கட்சியின் முன்னாள் எம்பி கே.சி. பழனிச்சாமி தொடுத்த வழக்கை அவசரமாக விசாரிக்க  தில்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 
  இதுதொடர்பாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே. சி. பழனிச்சாமி தில்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் வழக்குத் தொடுத்தார்.
  அதில், "2017, செப்டம்பர் 12-இல் நடைபெற்ற கட்சியின் பொதுக் குழுவில் யாருடைய கருத்தையும் கேட்காமல் அதிமுக விதிகள் திருத்தப்பட்டன. அதிமுக சட்ட விதி 43-இன்படி விதிகளைத் திருத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுச் செயலாளர் நியமனம் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்படும். இதன்படி, தேர்தல் தொடர்பான வேட்பு மனு படிவத்தில் பொதுச் செயலாளர் மட்டுமே கையெழுத்திட முடியும். எனவே, மக்களவைத் தேர்தலில் வேட்பு மனு "ஏ' மற்றும் 'பி' படிவங்களில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கையெழுத்திடுவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும், அவர்கள் கையெழுத்திடும் வேட்பு மனு "ஏ' மற்றும் "பி' படிவங்களை நிராகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரப்பட்டிருந்தது.
  இந்த வழக்கு விசாரணை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கண்ணா முன் கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. 
  இதனிடையே, இந்த வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி கே.சி. பழனிச்சாமி சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தில்லி உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர்மனுதாரர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் சார்பில் வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீனிவாசன், தேர்தல் ஆணையத்தின் சார்பில் பி.சி. சோப்ரா உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.
  அப்போது, மனுதாரர் கே.சி.பழனிச்சாமி தொடர்புடைய மனுக்கள், தேர்தல் ஆணையத்தால் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டுள்ளதையும், தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதும் தெரிவிக்கப்பட்டது.
  இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி மார்ச் 28-ஆம் தேதி நடைபெறும்  என நீதிபதி யோகேஷ் கண்ணா தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai