சுடச்சுட

  

  தேர்தல் விதிகள் அமல்: அரசு விளம்பரங்களை அகற்ற அனைத்து துறைகளுக்கும் உத்தரவு

  By DIN  |   Published on : 16th March 2019 07:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் தலைநகரில் வைக்கப்பட்டுள்ள அரசு விளம்பரங்களை அகற்றுமாறு அனைத்து துறைகளுக்கும் தில்லி அரசின் தகவல் மற்றும் விளம்பர இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 
  மக்களவைத் தேர்தல் தேதிகள், கடந்த 10-ஆம் தேதி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது.  தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலத்தில் அரசு செலவில் எந்த செய்தித் தாள்களிலும்,  இதழ்களிலும், வெளிப்புற ஊடகங்களிலும் விளம்பரம் வெளியிட  முடியாது. அதேபோன்று,  வானொலி,  தொலைக்காட்சிகளிலும் அரசு சார்பில் விளம்பர நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. மேலும்,  விளம்பரங்களுக்காக அரசு இடத்தையும் பயன்படுத்த அனுமதி கிடையாது.
  தற்போது மக்களவைத் தேர்தலைஒட்டி தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.  தில்லியிலும் இந்த விதிகள் அமலில் உள்ளது. இந்நிலையில், தில்லி அரசின் தகவல் மற்றும் விளம்பரம் இயக்ககத்தின் உயரதிகாரி சந்தீப் மிஸ்ரா, தில்லி அரசின் அனைத்து துறைகளின் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
  அதில் அரசு இடங்களில் எவ்வித விளம்பரங்களும் காட்சிப்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.  மேலும், அரசு இடங்களில் ஆய்வு நடத்தவும், ஏதாவது விளம்பரம் இடம்பெற்றிருந்தால் அவற்றை அகற்றவும்,  தொடர்ந்து விளம்பரம் ஏதும் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்ய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு துறையின் சார்பிலும் ஆய்வு செய்வதற்காக குழுக்கள் அமைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
  மேலும், மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் இதுபோன்று விளம்பரம் ஏதும் காட்சிப்படுத்தப்படாமல் இருப்பதையும், வானொலி,  தொலைக்காட்சிகளில் விளம்பர ஒலி-ஒளிபரப்பு நிகழாமல் இருப்பதையும் உறுதிப்படுத்துமாறு தில்லி தகவல், விளம்பர இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
  "ஒருவேளை விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலோ, தொலைக்காட்சி அல்லது வானொலி மூலம் விளம்பரம் ஒலி, ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தாலோ உடனடியாக அவை நீக்கப்பட வேண்டும். 
  மேலும், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள காலத்தில் இதுபோன்ற செயல்பாடுகள் ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.  அரசு வளாகங்களில் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் துறையின் சார்பில் குழு அமைக்கப்பட  வேண்டும். ஏதாவது விளம்பரம் இருந்தால் அவை அகற்றப்பட வேண்டும் என அந்த கடிதத்தில் சந்தீப் மிஸ்ரா அறிவுறுத்தியுள்ளார்.

  63,000 விளம்பர பதாகைகள் அகற்றம்
  தில்லியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இதுவரை 63,000 விளம்பர பதாகைகள், போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
  இதுதொடர்பாக அந்த அலுவலக அதிகாரிகள் கூறுகையில், "கடந்த 72 மணி நேரத்தில், பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 63,000 விளம்பர பதாகைகள், போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன. புது தில்லி முனிசிபல் கவுன்சில் (30,533), வடக்கு மாநகராட்சி (4,945), தெற்கு மாநகராட்சி (22,419), கிழக்கு மாநகராட்சி (3,141), தில்லி கண்டோன்மென்ட் வாரியம் (2,411) ஆகிய பகுதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது'
  தில்லியிலுள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai