சுடச்சுட

  

  தொழிற்சாலையில் திருடியதாக பெண் அடித்துக் கொலை: போலீஸில் புகார்

  By DIN  |   Published on : 16th March 2019 07:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புறநகர் தில்லியில் தொழிற்சாலை ஒன்றில் திருடியதாக, குப்பை பொறுக்கும் பெண்  தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  புறநகர் தில்லி,  சமய்ப்பூர் பாத்லியில் தொழிற்சாலையில் திருடியதாக குப்பை பொறுக்கும் பெண் மற்றும் சிலரை அடைத்து வைத்து இரவு முழுவதும் அடித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களை மீட்ட போலீஸார், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
  இதனிடையே, அவர்களில் ஒரு பெண்ணுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதாக கூறவே, அவர் மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்தபோது அவர் உயிரிழந்தார்.
  இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "சம்பவத்தன்று காலை 6 மணியளவில் போலீஸாரின் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், பெண்கள் சிலர் சமய்ப்பூர் பாத்லியில் உள்ள தொழிற்சாலையில் திருடியதால் அவர்கள் பிடித்து அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு சிலர் அப்பெண்களைச் சூழ்ந்திருந்தனர். சிலர் அடித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடமிருந்து சில திருட்டுப் பொருள்களையும் பறிமுதல் செய்திருந்ததாக காண்பித்தனர். 
  இதைத் தொடர்ந்து, அந்தப் பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தார். 
  இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அப்போது, பெண்களில் ஒருவருக்கு உடல்நிலை மோசமானது. இதையடுத்து, மீண்டும் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டார் என்று போலீஸார் கூறினர்.
  இதுகுறித்து பல்ஸ்வா டைரியில் உள்ள கலந்தர் காலனியைச் சேர்ந்த இறந்த பெண்ணின்உறவினர்
  கூறுகையில், "குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை பிரிப்பதற்காக சில பெண்கள் சென்றனர். அவர்களை ஆண்கள் சிலர் அங்குள்ள ஒரு இடத்திற்கு இழுத்துச் செல்ல முயன்றனர். 
  இதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களை திருட வந்தாக கூறி தாக்கினர். மேலும், இறந்த பெண்ணை காவல் நிலையத்தில் போலீஸாரும் தாக்கினர்' என்றார். இறந்த பெண்ணின் கணவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து, அப்பெண் தனது ஆறு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai