குக்கர் சின்னம் கோரும் டிடிவி தினகரனின் மனு: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல்,  இடைத்தேர்தல் ஆகியவற்றில் தங்களுக்கு குக்கர் சின்னம்

தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல்,  இடைத்தேர்தல் ஆகியவற்றில் தங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன், வி.கே. சசிகலா ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக கடந்த மார்ச் 5-ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) துணைப் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன்,  வி.கே.சசிகலா ஆகியோர் சார்பில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 
அதில் கூறப்பட்டிருந்ததாவது: தேர்தல் ஆணையம் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கியது சரியே என்று தில்லி உயர்நீதிமன்றம் பிப்ரவரி 28-இல் பிறப்பித்த உத்தரவுக்கும், இபிஎஸ் - ஓபிஎஸ் தலைமையிலான அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த 2017, நவம்பர் 23-இல் பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும்.  
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடையும் வரையிலும், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும். மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவற்றில் குக்கர் சின்னத்தையும்,  "அம்மா மக்கள் முன்னேற்றக் கழக'த்தின் பெயரையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.
இம் மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி, "தற்சமயம் தேர்தலில் போட்டியிடும் வகையில் பொதுச் சின்னமாக உள்ள  குக்கர் சின்னத்தை ஒதுக்கித் தர தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்றார்.
அப்போது,  எதிர் மனுதாரர்கள் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆட்சேபம் தெரிவித்து, "எங்கள் அணியே உண்மையான அதிமுக, எங்கள் அணிக்கே இரட்டை இலைச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.  டிடிவி தினகரன் தனியாக கட்சியை தொடங்கியுள்ளார்' என வாதிட்டார்.
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,  "இந்த மனு மீது தேர்தல் ஆணையம் மார்ச் 25-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மார்ச் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள விசாரணையின்போது  நீதிமன்றத்துக்கு உதவும் பொருட்டு  தகுந்த அதிகாரியை  தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com