பயங்கரவாதத்தை ஒடுக்க காங்கிரஸுக்கு தைரியம் இல்லை: ரவிசங்கர் பிரசாத்

மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு, பதிலடி கொடுக்கும் வகையில், பயங்கரவாதத்தை ஒடுக்க காங்கிரஸ் தலைமயிலான


மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு, பதிலடி கொடுக்கும் வகையில், பயங்கரவாதத்தை ஒடுக்க காங்கிரஸ் தலைமயிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குத் தைரியம் இல்லை என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
ஆனால், அண்மையில் நடைபெற்ற புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு, பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தில்லி பாஜகவின் வழக்குரைஞர்கள் பிரிவு கூட்டம் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது. அதில் பங்கேற்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி நேர்மறை அணுகுமுறையைக் கொண்டவராகத் திகழ்கிறார். மேலும், சவால்களை எதிர்கொள்ள நல்ல மன தைரியத்தையும் கொண்டுள்ளார்.
கடந்த 2011-இல் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அப்போது அதற்குப் பதிலடி கொடுக்கும் விததத்தில் இந்திய ராணுவம் தயாராகத்தான் இருந்தது. ஆனால், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதிலடி கொடுக்கவில்லை. அதற்கான தைரியத்தை காங்கிரஸ் தலைவர்கள் பெற்றிருக்கவில்லை.
ஆனால், அண்மையில் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மோடி தலைமையிலான மத்திய அரசு சரியான பதிலடி கொடுத்துள்ளது. அந்த வகையில், பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.  மேலும், விருப்பமான நாடுகள் பட்டியலில் வைத்திருந்த பாகிஸ்தானை இந்தியா திரும்பப் பெற்றுக் கொண்டது. மேலும், பாகிஸ்தான் பொருள்களுக்கு சுங்க வரியை 200 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது என்றார் ரவிசங்கர் பிரசாத்
இந்தக் கூட்டத்தின் போது, பாஜகவின் தில்லி தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான நிர்மலா சீதாராமன், இணைப் பொறுப்பாளர் ஜெய்பான் பாவியா  ஆகியோர் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களிடம் கலந்துரையாடினர். அப்போது தில்லியில் உள்ள 7 தொகுதிகளின் தற்போதைய நிலவரம், அது தொடர்பான அவர்களது கருத்துகள் ஆகியவற்றை கேட்டறிந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com