சிஐஎஸ்எஃப் காவலருக்கு  மீண்டும் வேலை: தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

தவறான முறையில் சாதிச் சான்றிதழ், உறைவிடச் சான்றிதழ் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பணியில்

தவறான முறையில் சாதிச் சான்றிதழ், உறைவிடச் சான்றிதழ் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) காவலருக்கு மீண்டும் உடனடியாக பணி வழங்குமாறு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை பணியில் இருந்து நீக்கியது நியாயமற்ற நடவடிக்கை எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
 இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் காவலர் பணிக்கு மனுதாரர் (காவலர்) விண்ணப்பித்தார். 2008, அக்டோபரில் அந்தப் பதவிக்கு தேர்வானார். 2009 முதல் 2013-ஆம் ஆண்டு வரை லக்னௌ விமான நிலையத்தில் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார். அதன் பிறகு, கொல்கத்தா விமான நிலையத்தில் பணியாற்றினார். இந்நிலையில், காவலருக்கு எதிராக மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படைக்கு 2015, ஜனவரியில் ஒரு அநாமதேய புகார் கடிதம் வந்தது. அதில், சம்பந்தப்பட்ட காவலர், வேலை பெறுவதற்காக தனது தனிப்பட்ட தகவல்களை பொய்யாக அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அவருக்கு குற்றக் குறிப்பாணை அனுப்பப்பட்டது. மேலும், அவர் உரிய ஆவணங்களை அளிக்காமல் ஓபிசி சாதிச் சான்றிதழ் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
 இதையடுத்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் அவர் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். முரளிதர், எஸ். மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, "வேலை நியமனம் பெறுவதற்காக தவறான வழியில் சாதிச் மற்றும் உறைவிடச் சான்றிதழ் பெற்றதற்கான ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில், சிஐஎஸ்எஃப் காவலரை பணியில் இருந்து நீக்கிய நடவடிக்கை நியாயமற்றது. மனுதாரர் (காவலர்) தன்னுடைய வாழ்க்கையில் போராட்டத்தை எதிர் கொண்டுள்ளார். பெங்களூரில் தினக்கூலி தொழிலில் ஈடுபட்டு, குடிசையில் வாழ்ந்தவரின் குழந்தையாக அவர் இருந்த போதிலும், தன்னுடைய 9 மற்றும் 10ஆம் வகுப்பை முடித்துள்ளார். உரிய தேர்வு, சோதனைகளுக்குப் பிறகு இறுதியாக மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையில் காவலராக நியமிக்கப்பட்டிருக்கிறார்' என்று உத்தரவில் நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது. 
மேலும், காவலரை பணியில் இருந்து நீக்கம் செய்து மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் விசாரணை அதிகாரி, மறுபரிசீலனை ஆணையம் ஆகியவை 2017 மற்றும் 2018-இல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சம்பந்தப்பட்ட காவலர் உடனடியாக பணியில் அமர்த்தப்பட வேண்டும். அதே சமயம் அவருக்கு எந்தவொரு நிலுவை ஊதியங்களும் பெறும் உரிமை இல்லை' என்று தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com