ஒரே வாரத்தில் உரிமம் இல்லாத 82 துப்பாக்கிகள்;  2,113 தோட்டாக்கள்; 16,500 லிட்டர் மதுபானம் பறிமுதல்: தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி பேட்டி

தேர்தல் அறிவிக்கப்பட்ட மார்ச் 10-ஆம் தேதியிலிருந்து இதுவரை தலைநகர் தில்லியில் உரிமம் இல்லாமல் கொண்டு

தேர்தல் அறிவிக்கப்பட்ட மார்ச் 10-ஆம் தேதியிலிருந்து இதுவரை தலைநகர் தில்லியில் உரிமம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 82 துப்பாக்கிகள், 2,113 தோட்டாக்கள், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 16,495 லிட்டர் மதுபானம் ஆகியவை பறிமுதல செய்யப்பட்டுள்ளதாக தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி ரன்பிர் சிங் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியதாவது: 
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் கடந்த 10ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளன. இதன்படி, சட்டவிரோதமாக பணம், ஆயுதங்கள் எடுத்துச் செல்வதைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
உரிமம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 82 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுளளன. இது தொடர்பாக ஆயுதச் சட்டத்தின் கீழ் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுளன. 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலால் சட்டத்தின் கீழ் 235 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், கலால் சட்ட விதிகளை மீறியதாக 242 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 16,49 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யபட்டுள்ளது. மேலும், 94 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் சட்ட விதிகளை மீறியதாக 13,001 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுளளது. 
இதற்கிடையே, தேர்தல் விதிகளை மீறி கார்களை தவறாகப் பயன்படுத்தியதாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2 மாதங்களில் தில்லி வாக்காளர் பட்டியலில் சுமார் 2 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவற்றையும் சேர்த்து தில்லியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1.39 கோடியாக உயர்ந்துள்ளது. 
இதில் 77,05,537 பேர் ஆண்கள்; 62,82,366 பேர் பெண்களாவர். 665 பேர் திருநங்கைகளாவர். மொத்த வாக்காளர்களில் 1,81,756 பேர் 18-19 வயதுக்குள்பட்டவர்கள். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் இதுவரையிலும், புதிதாக சுமார் 90,000 முதல் 1 லட்சம் வரை வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தில்லியைப் பொருத்தமட்டில் தற்போதை நிலையில், 425 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளன' என்றார்.
தில்லியில் மொத்தம் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 7 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மே 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தில்லியில் மொத்தம் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 12-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com