மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய அமைச்சரவை இரங்கல்

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புது தில்லியில்

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சரும், கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் அவர் இந்நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். அமெரிக்காவுக்கு சென்றும் சிகிச்சை பெற்றார். புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலும் சில நாள்கள் தங்கி சிகிச்சை பெற்றார். தொடர்ந்து கோவாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபடி சிகிச்சை பெற்றுக் கொண்டே முதல்வர் பதவியை கவனித்து வந்தார்.
இந்நிலையில், புற்றுநோயின் தாக்கம் காரணமாக கோவாவில் ஞாயிற்றுக்கிழமை அவர் காலமானார். இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 
இதற்கிடையே, தில்லியில் பிரதமரின் இல்லத்தில் திங்கள்கிழமை காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவரது நினைவாக இரு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், இந்திய அரசால் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதற்கும், மாநில தலைநகரங்களில் திங்கள்கிழமை தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.மேலும் இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 
கோவா மாநிலம், பனாஜியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவு மிகுந்த துன்பத்தை அளிப்பதாக அமைச்சரவை தெரிவித்துக் கொள்கிறது. அவரது மறைவின் மூலம், "சாமானியர்களின் முதல்வர்' என அன்புடன் அழைக்கப்படும் முதுபெரும், சிறந்த தலைவரை நாடு இழந்துள்ளது. பாரிக்கர் அவரது எளிமைக்காகவும், அவருடைய சிறந்த நிர்வாகத் திறனுக்காகவும் நினைவுகூரப்படுவார். நவீன கோவாவை உருவாக்குவதற்கும், இந்தியாவின் ராணுவப் படைகளை நவீனமயமாக்குவதற்கும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கும் அவரது பங்களிப்பு என்றும் மறக்கப்படாது. 2001-இல் ஐஐடி மும்பை கல்வி நிறுவனம் பாரிக்கருக்கு முன்னாள் மாணவருக்கான விருது வழங்கி கௌரவித்தது. 2018-இல், கோவாவில் உள்ள தேசிய தொழில்நுட்பவியல் நிறுவனம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அதே ஆண்டில் டாக்டர் எஸ்.பி. முகர்ஜி விருதும் வழங்கப்பட்டது. தனது இரு மகன்களுடன் அவர் வசித்து வந்தார். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கோவா மக்களுக்கும் ஒட்டுமொத்த தேசம் மற்றும் அரசின் சார்பில் அமைச்சரவை தனது இதயப்பூர்வ இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com