லோக்பால் அமைந்தவுடன் பிரதமருக்கு எதிராக ஊழல் புகார் அளிக்கப்படும்

லோக்பால் அமைப்பு அமைந்தவுடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ரஃபேல் போர் விமான ஒப்பந்தம், சஹாரா

லோக்பால் அமைப்பு அமைந்தவுடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ரஃபேல் போர் விமான ஒப்பந்தம், சஹாரா -பிர்லா ஆவணங்கள் வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி ஊழல் புகார்களை அளிக்கும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி அமைச்சருமான கோபால் ராய் தெரிவித்தார்.
லோக்பால் அமைப்பின் முதலாவது தலைவராக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பினாகி கோஷ் நியமிக்கபட வாய்ப்பிருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தனர். எனினும், மத்திய அரசு சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. 
இந்நிலையில், தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் கோபால் ராய் திங்கள்கிழமை கூறியதாவது: 
லோக்பாலின் நியமனமானது, இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நிகழ்த்திய போராட்டத்தின் உச்சநிலையைக் குறிக்கிறது. லோக்பால் விசாரணையின் கீழ் தாமும் வந்து விடுவோம் என்ற பயம் பிரதமருக்கு உள்ளது. இந்தியாவின் முதல் லோக்பால் அமைக்கப்படும் போது, ரஃபேல் போர் விமானங்கள் விவகாரம், சஹாரா - பிர்லா ஆவணங்கள் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்தி மோடிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி புகார் அளிக்கும்.
நாட்டின் பாதுகாவலர் என தன்னைக் கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, லோக்பாலை நியமிக்க  ஏன் ஐந்து ஆண்டுகள் ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.  நீதிமன்றங்களின் அழுத்தம் காரணமாகவே லோக்பால் அமைப்பை பாஜக ஏற்படுத்தியது. 
லோக்பாலுக்காக போராடிய இயக்கத்தை முதலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அடக்க முயற்சி செய்தது. ஆனால், நாட்டு மக்களின் உணர்வைப் புரிந்து கொண்ட பிறகு, அந்த ஆட்சியின் இறுதிக் காலத்தில், லோக்பாலை நியமிக்க சட்டத்தை உருவாக்க காங்கிரஸ் அரசு முடிவு செய்தது.
இந்நிலையில், வலுவான லோக்பால் அமைக்கப்படும் என லோக்பால் போராட்ட இயக்கத்திடம் பாஜக தலைவர்கள் பலர் உறுதிமொழி அளித்தனர். ஆனால், மத்தியில் 2014-ஆம் ஆண்டில் பாஜக அரசு அமைந்த பிறகு, நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை அவர்கள் மறந்துவிட்டனர் என்றார் கோபால் ராய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com