கூட்டணி குழப்பத்துக்கிடையே தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியது ஆம் ஆத்மி!: களப் பணியில் 1.50 லட்சம் தொண்டர்கள்
By DIN | Published On : 28th March 2019 05:56 AM | Last Updated : 28th March 2019 05:56 AM | அ+அ அ- |

தில்லியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி முடிவாகாத நிலையில், ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதையொட்டி, தேர்தல் பிரசாரத்தை ஒருங்கிணைக்கும் பணியில் சுமார் 1.5 லட்சம் தொண்டர்களை களத்தில் இறக்க ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் மோடி அரசை வீழ்த்துவதற்கு காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கூறி வந்தார். இதையடுத்து, கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று காங்கிரஸ் திட்டவட்டமாக அறிவித்தது. ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவர் ஷீலா தீட்சித் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.
மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெறவுள்ள தேர்தலைக் கருத்தில் கொண்டு தனித்துப் போட்டியிடுவதுதான் சிறந்தது என்றும் அவர் தெரிவித்
தார்.
இதைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிக்கும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மேலும், தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த மக்களவைத் தேர்தலை கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி சந்திக்கிறது. இதையொட்டி, ஒவ்வொரு தொகுதிகளிலும் ஏராளமான பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், தேசியப் பிரச்னைகளை முன்வைத்துதான் இந்த தேர்தலை சந்திப்பதாகவும், தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரிக்கை குறித்து தேர்தல் அறிக்கையில் இடம் பெறாது என்றும் காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அண்மையில் காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பெரும்பாலானோர் விரும்புவதாக அக்கட்சியின் தில்லி மேலிடப் பொறுப்பாளர் பி.சி. சாக்கோ கூறினார்.
மேலும், கூட்டணி குறித்து கட்சியின் தலைவர் ராகுல் காந்தி விரைவில் முடிவு எடுப்பார் என்றும் தெரிவித்தார்.இது ஒரு புறம் இருக்க இன்னும் கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தில்லி பொறுப்பாளர் கோபால் ராய் கூறியதாவது:
தேர்தல் பிரசாரத்தை கண்காணிக்கும் வகையில், கட்சியின் மத்திய அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படவுள்ளது. மேலும், ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள கட்சி அலுவலகத்தில் தலா ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படவுள்ளது. கட்சியின் தேர்தல் பிரசாரம் தொடர்பாக இங்கு பெறப்படும் தகவல்கள், புள்ளிவிவரங்கள் அனத்தும் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கு உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.
மேலும், தொகுதிக்கு ஒரு பார்வையாளர் வீதம் 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் கட்சியின் சார்பில் சிறப்புப் பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தேர்தல் பிரசாரத்தில் மேற்கொள்ளப்படும் பேரணி, பொதுக்கூட்டம் தொடர்பாக பின்னூட்டத் தகவல்களை அளிக்கும் வகையில், சிறப்பு அவசரக் குழுக்களும் அமைக்கப்படவுள்ளன. இதில் 14 பேர் பணியில் இருப்பர்.
அவர்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் தேர்தல் பிரசாரங்கள், பேரணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து மத்திய கட்டுப்பாட்டு அறைக்கு அறிக்கை அளிப்பர். மேலும், தேர்தல் களப் பணிக்காக 560 குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.
ஏற்கெனவே தேர்தல் பிரசாரத்துக்காக ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தேர்தல் பிரசாரத்தை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்வோரின் எண்ணிக்கை 1.50 லட்சமாக இருக்கும் என்றார் அவர்.
ஷீலா தீட்சித்துக்கு கோபால் ராய் கேள்வி
தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையில் பல்டி அளிக்க வேண்டிய நிர்பந்தம் என்ன என காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித்துக்கு ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பொறுப்பாளர் கோபால் ராய் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து தொடர்பான கோரிக்கை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறாது என ஷீலா தீட்சித் தெளிவுப்படுத்தியுள்ளார். இதன் மூலம் இந்தக் கோரிக்கை தொடர்பாக அவரும், காங்கிரஸ் கட்சியும் தில்லி மக்களிடம் பொய்யுரைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சி கடந்த தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து தொடர்பான வாக்குறுதியை அளித்தது.
ஆனால், இப்போது அந்தக் கோரிக்கை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறாது என்ற நிலைப்பாட்டை ஷீலா தீட்சித் மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும். தில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் இதுபோலத் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற அரசியல் கட்சிகளின் ஏமாற்று வேலைகளை ஆம் ஆத்மி கட்சி அனுமதிக்காது என்றார் கோபால் ராய்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...