கார் நிறுத்துவதில் தகராறு: பேஸ் பால் மட்டையால் தாக்கியஇருவருக்கு போலீஸார் வலைவீச்சு

மேற்கு தில்லியில் கார் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் முதியவர், பேஸ்பால் விளையாடும் மட்டையால் தாக்கப்பட்டார்.

மேற்கு தில்லியில் கார் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் முதியவர், பேஸ்பால் விளையாடும் மட்டையால் தாக்கப்பட்டார். அவரது மகனும் தாக்கப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் பக்கத்துவீட்டுக்காரர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
மேற்கு தில்லி, ஹரிநகரைச் சேர்ந்தவர் மஹிந்தர் பால் சிங். இவரது மகன் சிம்ரன்ப்ரீத் சிங் (26). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே காரை நிறுத்த முயன்றார். அப்போது, பக்கத்துவீட்டுக்காரர் ரமேஷ் சோப்ராவின் மோட்டார் சைக்கிள் அங்கிருந்ததால் அதை தள்ளி நிறுத்துமாறு கூறினார். ஆனால், சோப்ரா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, சோப்ராவின் மகன் மணீஷும் சிம்ரன்ப்ரீத் சிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, சமரசம் செய்யவந்த மஹிந்தர்பால் சிங்கை சோப்ராவும், அவரது மகன் மணீஷும் பேஸ்பால் மட்டையால் தாக்கிக் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் மஹிந்தர்பால் சிங்கின் தலையில் காயம் ஏற்பட்டது. மேலும், இதைத் தடுக்க முயன்ற சிம்ரன்ப்ரீத்தும் தாக்கப்பட்டார். 
இதுகுறித்து தில்லி காவல் துறையின் மேற்கு சரக உயர் அதிகாரி கூறுகையில், "சம்பவத்தின் உண்மையை அறியும் பொருட்டு அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், பக்கத்துவீட்டினரின் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. வாகனம் நிறுத்துவது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பக்கத்துவீட்டுக்காரர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com