பிரதமர் மோடியை எதிர்க்கும் குணம் ஹரியாணா மாநிலத்தவருக்கு உண்டு: கேஜரிவால்

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக எல்லை பாதுகாப்புப் படை முன்னாள்

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக எல்லை பாதுகாப்புப் படை முன்னாள் காவலரான ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த தேஜ் பகதூர் போட்டியிடுவதை, தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் வரவேற்றுள்ளார்.
மேலும், பிரதமர் மோடியை எதிர்க்கும் குணம், ஹரியாணா மாநிலத்தவருக்கு உண்டு என்றும் அவர் கூறினார்.
முதல்வர் கேஜரிவால், ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர், கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், வாராணசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்டு தோல்விகண்டார்.
இந்நிலையில், வாராணசியில் சமாஜவாதி-பகுஜன்சமாஜ்-ராஷ்ட்ரீய லோக் தளம் கூட்டணி சார்பில், எல்லைப் பாதுகாப்புப் படை முன்னாள் காவலர் தேஜ் பகதூர் யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார். முன்னதாக, இந்த கூட்டணி சார்பில் ஷாலினி யாதவ் அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் மாற்றப்பட்டு, தேஜ் பகதூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர், ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர். 
இந்நிலையில், முதல்வர் கேஜரிவால் சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
ஹரியாணா மண்ணில் ஏதோ இருக்கிறது. கடந்த முறைகூட, ஹரியாணாவைச் சேர்ந்த ஒருவர் (தன்னை குறிப்பிடுகிறார்) பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிட்டார். இம்முறை ஹரியாணாவைச் சேர்ந்த ஒருவ வீரர் (தேஜ் பகதூர்), மோடியுடன் மோதுகிறார். அவருக்கு ஒட்டுமொத்த நாட்டின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கேஜரிவால் கூறியுள்ளார். 
இன்று முதல் ஆம் ஆத்மி பேரணி: ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பொறுப்பாளர் கோபால் ராய் செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:  புதன்கிழமை (மே 1) முதல் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து கேஜரிவால் தலைமையில் பிரசார பேரணி நடைபெறவுள்ளது.  தொடக்க நாளன்று சாந்தினி சௌக் ஆம் ஆத்மி வேட்பாளர் பங்கஜ் குப்தாவை ஆதரித்து சாந்தினி சௌக் மாடல் டவுனில் பிரசார பேரணி நடைபெறவுள்ளது.
இதைத் தொடர்ந்து, மே 2-இல் கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி வேட்பாளர் அதிஷியை ஆதரித்து திரிலோக்புரியிலும், 3-இல்  வடகிழக்கு தில்லி ஆம் ஆத்மி வேட்பாளர் திலீப் பாண்டேயை ஆதரித்து சோனியா விஹாரிலும், 4-இல் தெற்கு தில்லி வேட்பாளர் ராகவ் சத்தாவை ஆதரித்து அம்பேத்கர் நகரிலும்,  5-இல்  மேற்கு தில்லி ஆம் ஆத்மி வேட்பாளர் பல்வீர் சிங் ஜாக்கரை ஆதரித்து துவாரகா செக்டார் 4-இலும்,   6-இல்  வடமேற்கு தில்லி வேட்பாளர் குஹன் சிங்கை ஆதரித்து முண்ட்காவிலும் கேஜரிவால் தலைமையில் பேரணி நடைபெறவுள்ளது.  8-இல் புது தில்லி தொகுதி வேட்பாளர் பிரிஜேஷ் கோயலை ஆதரித்து மோதி நகரில் கேஜரிவால் தலைமையில்  பேரணி நடைபெறவுள்ளது என்றார் கோபால் ராய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com