விவாதத்தில் நம்பிக்கை இல்லையா? கம்பீர் - அதிஷி கருத்து மோதல்
By DIN | Published On : 01st May 2019 07:36 AM | Last Updated : 01st May 2019 07:36 AM | அ+அ அ- |

"விவாதங்களில் நம்பிக்கை இல்லை. செயலில் மட்டுமே நம்பிக்கை உண்டு' என்று பாஜகவின் கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி வேட்பாளரும் பிரபல கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி கேள்விக்கு கெளதம் கம்பீர் இந்த பதிலை அளித்துள்ளார்.
அதேசமயம், விவாதங்களில் நம்பிக்கை இல்லாத கெளதம் கம்பீர், அரசியலில் எதற்கு நுழைந்தார் என அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார்.
கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் அதிஷி போட்டியிடுகிறார். இவர், கௌதம் கம்பீர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகிறார். இதற்கு ஞாயிற்றுக்கிழமை பதிலளித்த கௌதம் கம்பீர், ஆம் ஆத்மியிடம் தொலைநோக்குத் திட்டங்கள் எதுவும் இல்லாததால் தன் மீது வீண்பழி சுமத்துவதாகத் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, கிழக்கு தில்லியில் தில்லி அரசு, மத்திய அரசு மேற்கொண்ட மக்கள் நலப் பணிகள் தொடர்பாக நேரடி விவாதத்துக்கு கௌதம் கம்பீர் தயாரா என்று அதிஷி கடந்த திங்கள்கிழமை சவால் விடுத்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக கௌதம் கம்பீர் செவ்வாய்க்கிழமை கூறுகையில் "பிரதமர் மோடியை முன்மாதிரியாகக் கொண்டு அரசியலில் நுழைந்தவன் நான். எனக்கு செயல்களில் மட்டுமே நம்பிக்கை உள்ளது. விவாதங்களில் நம்பிக்கை இல்லை' என்றார்.
இதற்கிடையே, விவாதங்களில் நம்பிக்கை இல்லாத கெளதம் கம்பீர், அரசியலில் எதற்கு நுழைந்தார் என அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அரசியலின் அடிப்படையே விவாதம்தான். விவாதங்களில் நம்பிக்கை இல்லை எனக் கூறும் கௌதம் கம்பீர், எதற்காக அரசியலில் நுழைந்தார். தில்லி அரசு கிரிக்கெட் அகாதெமி ஒன்றை மிக விரைவில் தொடங்கவுள்ளது. கௌதம் கம்பீர் அதை எடுத்துக் கொள்ளட்டும். அங்கு, விவாதங்களுக்கு இடமில்லை' என்றார்.