தலைநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க என்டிஎம்சி திட்டம்
By DIN | Published On : 05th May 2019 11:49 PM | Last Updated : 05th May 2019 11:49 PM | அ+அ அ- |

கரோல் பாக் பகுதியைத் தொடர்ந்து, தில்லியில் போக்குவரத்து நெரிசல் உள்ள பிற இடங்களிலும் நெரிசலைக் குறைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) திட்டமிட்டு வருகிறது.
அண்மையில் கரோல் பாக் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முன்னோடித் திட்டத்தை வடக்கு தில்லி மாநகராட்சி மேற்கொண்டது. பொதுப் போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், பாதசாரிகளுக்கு உகந்த வகையில் சந்தைப் பகுதிகளை உருவாக்கவும் இத்திட்டத்தை இதர பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வடக்கு தில்லி மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.
இதுகுறித்து என்டிஎம்சி ஆணையர் வர்ஷா ஜோஷி கூறியதாவது: இதுபோன்ற விரிவுபடுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அடிப்படைப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுப் போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், கரோல் பாக் பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதற்கு முன்பு, அஜ்மல்கான் சாலை, பாதசாரிகள் பயன்படுத்தும் பகுதியாக மாற்றப்பட்டது. கடந்த புதன்கிழமை கரோல் பாக் அஜ்மல்கான் சாலைப் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் குறைந்திருந்ததைக் காண முடிந்தது. மேலும், நடைபாதைகள் இருக்கைகள், மலர்ச் சாடிகளுடன் தெரு அலங்கரிக்கப்பட்டிருந்ததை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் கண்டனர்.
தேர்தலுக்குப் பிறகு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. கரோல் பாக் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முன்னோடித் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், கீர்த்தி நகர், கமலா நகர் மார்க்கெட் பகுதிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு வருகிறோம். உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் மார்க்கெட் பகுதிகளில் பாதசாரிகளுக்கு உகந்த வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டத்திற்கான ஒப்புதலும், வாகன நிறுத்தக் கட்டணத்தை உயர்த்தும் விஷயமும் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் பெறப்பட்டது. அஜ்மல்கான் சாலையில் பல ஆண்டுகளாக வாகனப் போக்குவரத்து நெரிசலும், வாகனங்கள் நிறுத்துவதற்கு இடையூறும் இருந்து வந்தது. இத்திட்டம் 2010-இல் முதல் முறையாகத் திட்டமிடப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அதை செயல்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், என்டிஎம்சியில் ஆணையராகப் பொறுப்பேற்றவுடன் கரோல் பாக் பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்தினேன். சந்தை சங்கங்களின் ஒத்துழைப்புடன் மாநகராட்சியின் செயல்படாத இடங்கள், பழைய இடங்கள் ஆகியவை வாகனங்களை நிறுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. அஜ்மல் கான் சாலையின் 600 மீட்டர் தூரம் பாதசாரிகள் நடப்பதற்காக மாற்றப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பகுதிகளையும் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இருக்கைகள் அமைப்பதற்கான பணிகள் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அஜ்மல் கான் சாலையின் நுழைவுப் பகுதியில் பூசா சாலை, ஆர்ய சமாஜ் சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் கான்கிரீட் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
இத்திட்டத்தை மாற்று வாகன நிறுத்துமிடம் இல்லாமல் செயல்படுத்த முடியவில்லை. மேலும், அருகில் உள்ள இரு இடங்கள் வாகனங்களை நிறுத்தும் பகுதிகளாக உருவாக்கப்பட்டன. மக்கள் நடந்து சென்று பொருள்களை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. வாகனங்கள் நிறுத்த கட்டணம், முதல் ஒரு மணி நேரத்திற்கு ரூ.20-இல் இருந்து ரூ.40 ஆக உயர்த்தப்பட்டது.
அதேபோல, இரண்டாவது ஒரு மணி நேரத்திற்கு ரூ.50, மூன்றாவது மணிக்கு ரூ.60, மூன்று மணி நேரத்தில் இருந்து ஐந்து மணி நேரம் வரை ரூ.70, ஐந்து மணி நேரத்திற்கு மேல் இருந்தால் ரூ.300 என உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
எதிர்காலத்தில் வடக்கு தில்லியில் உள்ள அனைத்து முக்கிய சந்தைப் பகுதிகளிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்த செய்ய திட்டமிடுவோம் என்றார் அவர்.