முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
"தலசீமியா' விழிப்புணர்வு: பள்ளிகளுக்கு அரசு உத்தரவு
By DIN | Published On : 15th May 2019 07:03 AM | Last Updated : 15th May 2019 07:03 AM | அ+அ அ- |

"தலசீமியா' நோய் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடமும், பணியாளர்களிடமும் ஏற்படுத்த அனைத்துப் பள்ளிகளுக்கும் தில்லி அரசு உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாக சுகாதார வல்லுநர்களை அழைத்து வந்து பேச வைக்கவும் கேட்டுக்கொண்டுள்ளது.
"தலசீமியா' முக்கிய மரபணு நோயாகும். இது பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு கடத்தப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலான குழந்தைகள் "தலசீமியா' பாதிப்புடன் பிறக்கின்றன. இந்தியாவில் தற்போது தலசீமியாவால் பாதிக்கப்பட்டு 3 லட்சம் பேர் உள்ளனர்.
தில்லியில் பிறக்கும் 18 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு "தலசீமியா' பாதிப்பு உள்ளது. தில்லியில் ஒவ்வோர் ஆண்டும் 200 தலசீமியா பிறப்புகள் நிகழ்வதாக ஓர் ஆய்வை சுட்டிக்காட்டி தில்லி அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தில்லி கல்வி இயக்ககம் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் "தலசீமியா' விஷயம் நன்கு தெரிந்த மருத்துவர் அல்லது ஏதாவது அதிகாரியை சுகாதாரத் துறையில் இருந்து பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு உரையை வழங்கச் செய்யவும், இந்நோய் குறித்து மாணவர்கள், பணியாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வகை நோயாளிகளுக்கு அடிக்கடி, தொடர்ந்து ரத்தம் மாற்றுதலும், வாழ்வதற்கான இரும்பு சில்லேஷன் சிகிச்சையும் தேவைப்படுகிறது. ஒரு நோயாளிக்கு சராசரியாக இந்த சிகிச்சைக்கு ஓராண்டுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை செலவாகும்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் "தலசீமியா' பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சராசரியாக 30 யூனிட்டுகள் ரத்தம் தேவைப்படுகிறது. விழிப்புணர்வு, உரிய நேரத்தில் பரிசோதனை மூலம் தலசீமியா பிறப்பை முற்றிலும் தடுக்க முடியும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.