முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
பாஜக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை: காங்கிரஸ்
By DIN | Published On : 15th May 2019 07:06 AM | Last Updated : 15th May 2019 07:06 AM | அ+அ அ- |

பாஜக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஹபூர் பகுதியில் ரூ.10,000க்கு விற்கப்பட்ட பெண், தன்னைப் பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியதாகக் காவல் துறையில் புகார் அளித்தார். ஆனால், அவரது புகாரைக் காவல் துறையினர் ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, அவர் தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். 80 சதவீத தீக்காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில், தில்லியில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து அவர்கள் சிறிதும் சிந்தித்து பார்க்கவில்லை. ஹபூர் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு அவர்கள் நீதி வழங்க மறுத்துவிட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தப் பெண்ணை பிரதமர் மோடி நேரில் சந்தித்து, அவருக்கு நீதி வழங்கப்படாததற்கு விளக்கமளிக்க வேண்டும். பாஜக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியில் பெண்கள் பாதுகாப்புக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கிவரும் பாஜக பெண் அமைச்சர்கள், ஹபூர் சம்பவம் குறித்து கேள்வி எழுப்புவார்களா?
சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க பாஜக மறுத்து வருகிறதா அல்லது பாஜகவினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனரா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தேசிய பாதுகாப்பில் சமரசம்: காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், "தேசிய பாதுகாப்பில் மோடி அரசாங்கம் சமரசம் செய்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில், மோடி அரசாங்கம் அதை 26 ஆகக் குறைத்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நிதிப் பற்றாக்குறை காரணமாகவே ரஃபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். அதற்குக் கருத்து தெரிவிக்கும் வகையில் சுர்ஜேவாலா இவ்வாறு பதிவிட்டுள்ளார்.