முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
மோடி குறித்த அவதூறு கருத்து: மணிசங்கர் ஐயருக்கு மன்ஜீந்தர் சிங் கண்டனம்
By DIN | Published On : 15th May 2019 07:05 AM | Last Updated : 15th May 2019 07:05 AM | அ+அ அ- |

பிரதமர் மோடியை இழிவான மனிதர் என்று பொருள்படும் வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயருக்கு சிரோமணி அகாலி தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் தில்லி எம்எல்ஏவுமான மன்ஜீந்தர் சிங் சிர்சா கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மணிசங்கர் ஐயர், 2017-ஆம் ஆண்டு பிரதமர் மோடியை இழிவான மனிதர் எனப் பொருள்படும் வகையில் "நீச் ஆத்மி' என விமர்சித்திருந்தார். இது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து மணிசங்கர் ஐயர் சில மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் தனது கருத்துக்கு அவர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இணைய ஊடகம் ஒன்றில் மணிசங்கர் ஐயர் கட்டுரை எழுதியுள்ளார். அதில், மோடியை அவர் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், "2017-ம் ஆண்டு தாம் மோடியை "நீச் ஆத்மி' என விமர்சித்திருந்தேன். என் கணிப்பு சரியானதுதான்' என்று எழுதியிருந்தார். இது மீண்டும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி "நீச் ஆத்மி' அல்ல. 3,000 சீக்கியர்களைக் கொலை செய்த நேரு குடும்பத்தினர்தான் "நீச் ஆத்மி'கள் என்று மன்ஜீந்தர் சிங் சிர்சா சாடியுள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 1984 சீக்கியக் கலவரத்துடன் தொடர்புடையவர்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு சிறைக்கு அனுப்பி வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி அதிருப்தியடைந்துள்ளது. மேலும், சீக்கியக் கலவரத்துடன் தொடர்புடைய அனைவரையும் சிறைக்கு அனுப்புவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
இது காங்கிரஸ் கட்சியின் முதல் குடும்பமான நேரு குடும்பத்தை கோபப்படுத்தியுள்ளது. ஏனென்றால், சீக்கியக் கலவரத்தை திட்டமிட்டு அரங்கேற்றியது அவர்கள்தான். இதனால், அவர்களது தூண்டுதலில் பிரதமர் மோடியை "நீச் ஆத்மி' என மணி சங்கர் ஐயர் 2017-இல் அழைத்தார். இப்போது, தான் அவ்வாறு அழைத்ததில் தவறில்லை எனக் கூறியுள்ளார்.
உண்மையில், 3,000 க்கும் அதிகமான அப்பாவி சீக்கிய மக்களைக் கொன்று குவித்த காந்தி குடும்பத்தினர்தான் "நீச் ஆத்மி'கள். பெரிய ஆலமரம் விழும் போது நிலம் அதிரத்தான் செய்யும் என சீக்கியக் கலவரத்தை நியாயப்படுத்திப் பேசிய ராஜீவ் காந்திதான் "நீச் ஆத்மி'. சீக்கியக் கலவரத்துக்கு இதுவரை மன்னிப்புக் கோராத ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி ஆகியோரும் அத்தகையவர்கள்தான் என்றார் சிர்சா.