முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
திருட முயன்றதை தட்டிக் கேட்ட இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு
By DIN | Published On : 18th May 2019 03:54 AM | Last Updated : 18th May 2019 03:54 AM | அ+அ அ- |

மேற்கு தில்லி, கியாலா பகுதியில் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருட முயன்றதை தட்டி கேட்ட 30 வயது இளைஞர் துப்பாக்கியால் சுடப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது:
கியாலாவில் உள்ள ரகுவீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திரா (30). இவர், சம்பவத்தன்று இரவு 1.30 மணி அளவில் தனது வீட்டுக்கு நண்பருடன் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, மூன்று பேர் ஒரு மோட்டார் சைக்கிளின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்து கொண்டிருந்தனர். இதைத் தடுக்க நரேந்திரா முயன்றார். அப்போது, திருடர்களில் ஒருவர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் நரேந்திராவின் காலில் குண்டடிபட்டது.
இதையடுத்து, நரேந்திராவும் அவருடைய நண்பரும் கூச்சலிட்டனர். இதைத்தொடர்ந்து, அந்த இடத்திலிருந்து 3 கொள்ளையர்களும் தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸில் நரேந்திரா புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக ரகுவீர் நகரைச் சேர்ந்த விகாஸ், வினோத், சோம்நாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வினோத் 10 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும், மற்ற இருவருக்கும் எதிராக திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.