முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
தேடப்பட்ட ரௌடி கைது
By DIN | Published On : 18th May 2019 03:53 AM | Last Updated : 18th May 2019 03:53 AM | அ+அ அ- |

கொலை, கார் திருட்டு உள்ளிட்ட 11 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ரௌடியை தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கடந்த சில மாதங்களாக தில்லியில் வசந்த் குஞ்ச் மால், சாகேத் மால் உள்ளிட்ட இடங்களில் சொகுசு கார்கள் திருடப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. கார்களின் ஓட்டுநரை கத்திமுனையில் கடத்திச் சென்று, காரை கொள்ளையர்கள் திருடி வந்தனர். அந்த கார் திருட்டு கும்பலை பிடிக்க குற்றப் பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்திருந்தனர்.
தீவிர முயற்சிக்குப் பிறகு இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஹரியாணா மாநிலம், சோனிபட் பகுதியைச் சேர்ந்த பிரபல ரௌடி விஜய் ஃபர்மானா, உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, இரு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் நடத்திய விசாரணையில் 11 கொலை, கார் திருட்டு, கொலை முயற்சி சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரைப் பிடித்துக் கொடுக்க உதவினால் ரூ.50 ஆயிரம் பரிசு அளிக்கப்படும் என்று தில்லி காவல் துறையும், ரூ.10 ஆயிரம் பரிசு அளிக்கப்படும் என்று ஹரியாணா காவல் துறையும் ஏற்கெனவே அறிவித்திருந்தன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.