சட்டவிரோத தொழிற்சாலைகளைக் கண்டறிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிபிசிசி உத்தரவு

தில்லியில் குடியிருப்புப் பகுதிகளில் சட்டவிரோத தொழிற்சாலைகளைக் கண்டறிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து


புது தில்லி: தில்லியில் குடியிருப்புப் பகுதிகளில் சட்டவிரோத தொழிற்சாலைகளைக் கண்டறிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநகராட்சிகளுக்கும், தில்லி வளர்ச்சி ஆணையத்திற்கும் (டிடிஏ) தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு (டிபிசிசி) உத்தரவிட்டுள்ளது. 

மேலும், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத தொழிற்சாலைகளை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அந்த அமைப்பு உத்தரவிட்டிருக்கிறது. தில்லி ஜல் போர்டு மற்றும் மின் விநியோக நிறுவனங்களுக்கு டிபிசிசி பிறப்பித்த உத்தரவில், இதுபோன்ற சட்டவிரோத தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.  

இதுகுறித்து டிபிசிசி மூத்த அதிகாரி கூறியதாவது: 
குடியிருப்புப் பகுதிகளில் உரிய மாநகராட்சி உரிமம் இல்லாமல் செயல்படும் தொழிற்சாலைகள் குறித்து கள ஆய்வு செய்யுமாறு தில்லியில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மற்றும் தில்லி வளர்ச்சி ஆணையத்திற்கும் டிபிசிசி மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கள ஆய்வுக்கு பிறகு அந்த தொழிற்சாலைகளை மூட  நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்று ஏற்கனவே குறைந்தபட்சம் 52,000 தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டுள்ளன. மாற்று இடங்களுக்காக அந்த தொழிற்சாலைகள் விண்ணப்பித்து இருக்கின்றன. 

இந்த 52 ஆயிரம் தொழிற்சாலைகளுக்கு அப்பால் வேறு ஏதேனும் சட்டவிரோத தொழிற்சாலைகள் குடியிருப்புப் பகுதிகளில் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனவா என்பதை கண்டறிய இந்த கள ஆய்வு உதவிடும்.

இது தொடர்பாக அனைத்து மாநகராட்சிகள், தில்லி  வளர்ச்சி ஆணையம், மின் விநியோக நிறுவனங்கள், தில்லி ஜல் போர்டு  ஆகியவற்றுக்கு மே 9-ஆம் தேதி ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தொழிற்சாலைகள் ஆணையர் தலைமையிலான உயர்நிலை அதிகார குழுவிடமிருந்து தடையின்மைச் சான்று பெற்ற மற்றும் தில்லி மாஸ்டர் பிளான் 2021ம் கீழ் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்றார் அந்த  அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com