கச்சத்தீவு உரிமையை மீட்க மத்திய அரசு முன்வர வேண்டும்: திருமாவளவன்

கச்சத் தீவு உரிமையை மீட்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்

கச்சத் தீவு உரிமையை மீட்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்தார். மேலும், தமிழகத்தின் உரிமைகளுக்காக மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் முறையே விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், பொதுச் செயலர் துரை.ரவிக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்நிலையில், இருவரும் நாடாளுமன்றத்திற்கு எம்பி பதிவுக்காக திங்கள்கிழமை தில்லி வந்தனர். 
அப்போது, "தினமணி'க்கு தொல்.திருமாவளவன் அளித்த பேட்டி: தமிழகத்தில் நரேந்திர மோடிக்கு எதிரான அலை வெளிப்படையாக வீசியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்றவற்றால் அகில இந்திய அளவிலும் மத்திய பாஜக அரசு மீது அதிருப்தி இருந்தது. ஆனால், வட இந்திய மாநிலங்களில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. 2016 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைககளை எதிர்த்துப் போராடிய கட்சிகள் ஒன்று சேர்ந்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி உருவானது. இதனால்தான், தமிழகத்தில் திமுக கூட்டணி இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மத்தியில் பாஜக மீண்டும் மிகப்பெரும் பலத்துடன் ஆட்சிக்கு வந்திருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. ஏனெனில், அக்கட்சி வெளிப்படையாக மதவாதக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் கட்சி. சிறுபான்மையின மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல் தொடரும் என்ற அச்சம் உள்ளது. திமுக தலைமையில் அமைந்த அணியைப் போல உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலக் கட்சிகள், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்து இத்தேர்தலை சந்தித்திருந்தால் பாஜகவை வீழ்த்தியிருக்க முடியும் என்பது என் நம்பிக்கை.
 நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க முயற்சிக்க கூடாது. கடலோர மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா குழுமத்திற்கு வழங்கிய உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். கச்சத் தீவு உரிமையை தமிழகம் முற்றிலும் இழந்து நிற்கிறது. அந்த உரிமையை மீட்க மத்திய அரசு முன்வர வேண்டும். 
ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் நடத்தும் அரசியலை முற்றிலும் கைவிட வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களின் பிரச்னைகள், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் பிரச்னைகள், ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூக, விளிம்புநிலை மக்களின் நலன்கள், தமிழ் மொழி நலன்கள் ஆகியவற்றுக்காக நாடாளுமன்றத்தில் நாங்கள் குரல் எழுப்புவோம். திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com