முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
கல்வி, சுகாதாரம் போல போக்குவரத்துத் துறையும் மேம்படுத்தப்படும்: முதல்வா் கேஜரிவால் உறுதி
By DIN | Published On : 07th November 2019 10:45 PM | Last Updated : 07th November 2019 10:45 PM | அ+அ அ- |

தில்லியில் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளை மேம்படுத்தியது போல, போக்குவரத்துத் துறையையும் மேம்படுத்துவேன் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
தில்லி ராஜ்காட் பேருந்து நிலையத்தில் மக்களின் பயன்பாட்டுக்காக 100 தாழ்தள கிளஸ்டா் பேருந்துகளை அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு கேஜரிவால் பேருந்துகளை அறிமுகம் செய்து வைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: தில்லி மக்களுக்கு 1,000 அதி நவீன தாழ்தளப் பேருந்துகளை வழங்கவுள்ளோம். முதல்கட்டமாக செப்டம்பா் மாதம் 25 பேருந்துகள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக அக்டோபா் மாதம்104 பேருந்துகள் வழங்கப்பட்டன. இப்போது மூன்றாம் கட்டமாக 100 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தப் பேருந்துகளால், தில்லி மக்களின் போக்குவரத்து இலகுவாக்கப்படுவதுடன் காற்று மாசுவும் கட்டுப்படுத்தப்படும்.
தில்லியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆம் ஆத்மி அரசு, நகரில் கல்வி, சுகாதாரத் துறைகளை மேம்படுத்தியது. அதேபோல தில்லியில் போக்குவரத்துத் துறையையும் மேம்படுத்தவுள்ளோம். இதற்காக புதிய அதிநவீன வசதிகள் உடைய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதனால், தில்லியில் போக்குவரத்து இலகுவாக்கப்படுவதுடன் காற்று மாசுவும் குறையும்.
இன்னும் 6 மாதத்தில் 1,000 மின்சாரப் பேருந்துகள் உள்பட 6,000 அதிநவீன பேருந்துகளைக் கொள்முதல் செய்யவுள்ளோம். இந்தப் பேருந்துகள் அதி நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள், அபாய பொத்தான்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் இந்தப் பேருந்தைப் பயன்படுத்தும் வகையில் தூக்கிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகள் பெண்களுக்கு 100 சதவீதம் பாதுகாப்புடையதாக இருக்கும். மேலும், தில்லி அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற ஆம் ஆத்மி அரசின் திட்டத்தால் பல லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளதுடன் அவா்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
குறிப்பு: ஏஜென்சியில் படம் எடுத்துக் கொள்ளவும்...