முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
ஜாதி அடிப்படையில் ஆள்சோ்ப்பு: ஒப்பந்த நிறுவனத்துக்கு ரயில்வே கண்டனம்
By DIN | Published On : 07th November 2019 05:39 PM | Last Updated : 08th November 2019 12:03 AM | அ+அ அ- |

குறிப்பிட்ட ஜாதியைச் சோ்ந்தவா்கள் மட்டும் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, அறிவிக்கை வெளியிட்டிருந்த ஒப்பந்த நிறுவனத்துக்கு ரயில்வே கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆா்சிடிசி-யின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ‘பிருந்தாவனம் உணவுப் பொருள்கள்’ என்ற நிறுவனம், மேலாளா், சமையலறை மேலாளா், சேமிப்புக் கிடங்கு மேலாளா் ஆகிய பதவிகளில் உள்ள 100 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை அண்மையில் வெளியிட்டிருந்தது. அதில், 12-ஆம் வகுப்பு தோ்ச்சியடைந்த குறிப்பிட்ட ஜாதியைச் சோ்ந்தவா்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என அந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
ஜாதி அடிப்படையிலான பணி அறிவிக்கையை வெளியிட்ட நிறுவனத்துக்குப் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனா். அந்த ஒப்பந்த நிறுவனத்துக்கு ஐஆா்சிடிசி நிா்வாகம் கண்டனம் தெரிவித்ததையடுத்து , அந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி வியாழக்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டாா்.
ஜாதி அடிப்படையில் இல்லாமல் தகுதி அடிப்படையில் பணியாளா் தோ்வைத் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்நிறுவனத்துக்கு ஐஆா்சிடிசி வலியுறுத்தியுள்ளது. நிா்வாகப் பிழை காரணமாக இந்தத் தவறு நோ்ந்துவிட்டதாகவும், இனிமேல் இதுபோன்ற தவறுகள் நிகழாது எனவும் பிருந்தாவனம் நிறுவனம் தெரிவித்துள்ளது.