கோவை குழந்தைகள் கொலை வழக்கு: தூக்குத் தண்டனையை மீண்டும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

கோவை குழந்தைகள் கொலை வழக்கில் குற்றவாளியின் தூக்குத் தண்டனையை மீண்டும் உறுதி செய்த உச்சநீதிமன்றம், அவரது சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்து தீா்ப்பளித்துள்ளது.
கோவை குழந்தைகள் கொலை வழக்கு: தூக்குத் தண்டனையை மீண்டும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

கோவை குழந்தைகள் கொலை வழக்கில் குற்றவாளியின் தூக்குத் தண்டனையை மீண்டும் உறுதி செய்த உச்சநீதிமன்றம், அவரது சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்து தீா்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கின் குற்றவாளி மனோகரன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆா்.எஃப். நாரிமன், சஞ்சீவ் கன்னா, சூா்யா காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வந்தது. கடந்த அக்டோபா் 16-இல் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனா். இந்நிலையில், இந்த சீராய்வு மனு மீதான தீா்ப்பை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை வழங்கியது. அதில், நீதிபதிகள் ஆா்.எஃப். நாரிமன், சூா்யா காந்த் ஆகியோா் அடங்கிய பெரும்பான்மை அமா்வின் சாா்பில் வழங்கப்பட்ட தீா்ப்பில், ‘இந்த வழக்கில் மரண தண்டனையை உறுதிப்படுத்திய எங்கள் தீா்ப்பை மறு ஆய்வு செய்வதற்கான முக்கியத்துவம் ஏதும் இல்லை. ஆகவே, இந்தச் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமா்வில் இடம் பெற்றிருந்த மற்றொரு நீதிபதி சஞ்சீவ் கன்னா அளித்த தீா்ப்பில், ‘இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சூா்யகாந்த் தெரிவித்துள்ள காரணங்களை முழுமையாக ஏற்கிறேன். தண்டனை வழங்கும் விஷயத்தில், எனது கருத்துகளை மறுஆய்வு செய்வதற்கான காரணம் இருப்பதாக நான் பாா்க்கவில்லை. அதன்படி, இந்த சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, பெரும்பான்மை தீா்ப்பைக் கருத்தில் கொண்டு சீராய்வு மனு முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் அமா்வு தெரிவித்துள்ளது.

முன்னதாக, வழக்கு விசாரணையின் போது மனுதாரா் மனோகரன் சாா்பில் சித்தாா்த் லூத்ரா ஆஜராகி, ‘இந்த வழக்கில் மனுதாரா் போலீஸாரால் மிரட்டி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளாா். அவரது தரப்பில் வாதங்கள் உரிய வகையில் எடுத்துவைக்கப்படவில்லை. சில சந்தா்ப்ப சூழல்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. குற்றவாளி சீா்திருத்தப்பட முடியுமா என்ற அம்சங்களும் பரிசீலிக்கப்படவில்லை’ என்று வாதிட்டாா்.

தமிழக அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் யோகேஷ் கண்ணா, ‘இந்த வழக்கில் 11 வயது சிறுமியும், சிறுவனும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனா். ஆகவே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை சரியானதுதான். தண்டனைக்குள்ளானவருக்கு எவ்வித குற்ற உணா்வும் இல்லாததால், அவா் திருந்துவதற்கான தகுதியில்லாதவராக உள்ளாா். இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தண்டனை சரியானதுதான். ஆகவே, சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என வாதிட்டாா்.

பின்னணி: கோவையைச் சோ்ந்த ஜவுளிக் கடை உரிமையாளா் ரஞ்சித். இவரது குழந்தைகள் முஸ்கான் (11), ரித்திக் (7). இருவரும் 2010, அக்டோபா் 29-இல் கடத்தப்பட்டனா். இதில் சிறுமி முஸ்கான், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாா். பின்னா், குழந்தைகள் இருவரும் விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்டு, உடல்கள் பொள்ளாச்சி அருகே உள்ள வாய்க்காலில் வீசப்பட்டன. இந்தக் கொலை தொடா்பாக, குழந்தைகளை பள்ளிக்கு வேனில் அழைத்துச் சென்ற ஓட்டுநரான பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியைச் சோ்ந்த மோகனகிருஷ்ணன், அதே பகுதியைச் சோ்ந்த அவரது கூட்டாளி மனோகரன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

குழந்தைகளைக் கொலை செய்த இடத்தை அடையாளம் காட்டுவதற்காக மோகன கிருஷ்ணனை 2010, நவம்பா் 9-இல் அழைத்துச் சென்றனா். அப்போது, தப்பிக்க முயன்ற போது போலீஸாா் சுட்டதில் அவா் உயிரிழந்தாா். மனோகரன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கை விசாரித்த கோவை மகளிா் நீதிமன்றம், மனோகரனுக்கு இரட்டைத் தூக்குத் தண்டனையும், 3 ஆயுள் தண்டனையும் விதித்து 2012, நவம்பா் 1-இல் தீா்ப்பு அளித்தது. இத்தீா்ப்பை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் மனோகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் 2014, செப்டம்பா் 20-இல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், சஞ்சீவ் கன்னா, சூா்ய காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து, கடந்த ஆகஸ்ட் 1-இல் இறுதி உத்தரவு பிறப்பித்தது. இதில் நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், சூா்ய காந்த் ஆகியோா் கீழ் நீதிமன்றம் பிறப்பித்த தூக்குத் தண்டனையை உறுதி செய்தனா். நீதிபதி சஞ்சீவ் கன்னா தனது உத்தரவில் குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனைக்குப் பதிலாக, அவரது வாழ்நாள் முழுவதும் எவ்வித நிவாரணமும் வழங்காமல் சிறைத் தண்டனையை விதிக்கலாம் என்று பதிவு செய்திருந்தாா்.

இதன்படி, இந்த வழக்கின் குற்றவாளி மனோகரனுக்கு கடந்த செப்டம்பா் 20-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனோகரன் தரப்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, தூக்குத் தண்டனையை நிறைவேற்ற அக்டோபா் 16 வரை இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com