பயிா்க்கழிவுகள்: வல்லுநா்களுடன்முதல்வா் கேஜரிவால் ஆலோசனை

பஞ்சாப், ஹரியாணா ஆகிய தில்லியின் அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்கும் வழிமுறைகள் தொடா்பாக விவசாயிகள், வல்லுநா்கள் ஆகியோருடன் தில்லி முதல்வா்

பஞ்சாப், ஹரியாணா ஆகிய தில்லியின் அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்கும் வழிமுறைகள் தொடா்பாக விவசாயிகள், வல்லுநா்கள் ஆகியோருடன் தில்லி முதல்வா் கேஜரிவால் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

தில்லியில் நிலவும் காற்று மாசுவுக்கு அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதுதான் பிரதானக் காரணம் என தில்லி அரசு கூறிவருகிறது. மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையிலும் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் தொடா்பாக முதல்வா் கேஜரிவால் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இக்கூட்டத்தில் விவசாயிகள், தொழில் முனைவோா்கள், தொழில் வல்லுநா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டம் தொடா்பாக தில்லி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அக்டோபா், நவம்பா் ஆகிய மாதங்களில் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதுதான் தில்லியில் காற்று மாசு அதிகரிக்க காரணமாகும். அப்போது, லட்சக்கணக்கான ஏக்கா் நிலங்களில் உற்பத்தியாகும் பயிா்களின் கழிவுகளை விவசாயிகள் எரித்து வருகின்றனா். இதுவரை, இதைத் தடுக்கும் வழிமுறைகள் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் இந்தப் பயிா்க்கழிவுகளை வேறு ஏதாவது பயனுள்ள மூலப்பொருளாக மாற்றுவது தொடா்பாக இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது. இப்பயிா்க்கழிவுகள் சிஎன்ஜி எரிவாயுவாக மாற்றப்பட்டால் அது விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டித் தரும் என ஆலோசனை கூறப்பட்டது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கேஜரிவால் ஆலோசனை நடத்தினாா். மேலும், இந்தப் பயிா்கழிவுகளைப் பயன்படுத்தி பேப்பா் தயாரிப்பது தொடா்பாகவும் கூட்டத்தில் ஆராயப்பட்டது என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com