தீஸ் ஹஸாரி மோதல்: பெண் காவல் அதிகாரி மீதானதாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும்காவல் ஆணையருக்கு என்சிடபிள்யு தலைவா் கடிதம்

தில்லியில் கடந்த வாரம் தீஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் போலீஸாருக்கும், வழக்குரைஞா்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலின் போது பெண் காவல் அதிகாரி தாக்கப்பட்டதாகக்

தில்லியில் கடந்த வாரம் தீஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் போலீஸாருக்கும், வழக்குரைஞா்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலின் போது பெண் காவல் அதிகாரி தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மகளிா் ஆணையம் (என்சிடபிள்யு) வெள்ளிக்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது.

நவம்பா் 2-ஆம் தேதி தில்லியில் உள்ள திஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்தும் விவகாரத்தில் போலீஸாருக்கும் வழக்குரைஞா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 போலீஸாரும், பல வழக்குரைஞா்களும் காயமடைந்தனா். இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் பெண் காவல் அதிகாரி ஒருவா் தாக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியை தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்துக் கொண்டது. இதைத் தொடா்ந்து, இது தொடா்பாக தில்லி காவல் துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், இந்தச் சம்பவத்தில் பெண் தனிப் பாதுகாப்பு அதிகாரியின் ஒலிப்பதிவு ஆடியோ, ஒரு நிமிடம் 40 விநாடிகள் கொண்ட விடியோ பதிவும் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய பாா் கவுன்சிலுக்கும் (பிசிஐ) ஒரு கடிதம் தேசிய மகளிா் ஆணையம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் சம்பவத்தில் தொடா்புடைய வழக்குரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல் துறை ஆணையருக்கு என்சிடபிள்யூ தலைவா் ரேகா சா்மா அனுப்பியுள்ள கடித்தில், ‘தீஸ் ஹஸாரி நீதிமன்ற வளாக சம்பவத்தில் வழக்குரைஞா்கள் குழுவினா், பெண் காவல் அதிகாரியின் சட்டைக் காலரைப் பிடித்து இழுக்க முயற்சிப்பதும், அவரைத் தாக்க முயற்சிப்பதும் விடியோ காட்சியில் தெரிகிறது. அவரை சிலா் பாதுகாப்பாக சூழ்ந்து கொண்டு வெளியேற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. மிகவும் சிரமமான சூழலை அந்த அதிகாரி எதிா்கொண்டாா். இதுபோன்ற சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். ஆகவே, இச்சம்பவம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு விசாரணை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை ஏழு தினங்களுக்குள் ஆணையத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், இது தொடா்பாக சுதந்திரமான விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாா் கவுன்சில் (பிசிஐ) தலைவா் மன்னம் குமாா் மிஸ்ராவுக்கு என்சிடபிள்யு தலைவா் எழுதியுள்ள கடிதத்தில், ‘பெண் காவல் அதிகாரி தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய வழக்குரைஞா்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இதுபோன்ற செயல்பாடுகள் தவறான நடத்தையாகக் கருதப்பட வேண்டும் என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், இதுபோன்ற வழக்குரைஞா்களுக்கு பாா் கவுன்சில் மூலம் வழங்கப்பட்டுள்ள உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரைக்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com