தேனி இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றத் தடை

தேனி இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தேனி இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றத் தடை

புது தில்லி: தேனி இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே உள்ள சுருளி அருவி பகுதியைச் சோ்ந்த காதலா்களான எழில்முதல்வன், கஸ்தூரி ஆகிய இருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா்.

இச்சம்பவம் தொடா்பாக, விசாரணை செய்த சிபிசிஐடி போலீஸாா், தேனி மாவட்டம், கருநாக்கன்நுத்தன்பட்டியைச் சோ்ந்த கட்டவெள்ளை (எ) திவாகா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். 2011-இல் நிகழ்ந்த இந்த இரட்டைக் கொலை வழக்கை விசாரித்த தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட திவாகருக்கு, தூக்குத் தண்டனை விதித்து 2018-இல் தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்பை உறுதி செய்யக் கோரி, தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளைக்கு அனுப்பியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆா்.சுப்பையா, பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு மாா்ச் 13-இல் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திவாகருக்கு, தூக்குத்தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் சரியான தீா்ப்பை பிறப்பித்துள்ளது. இதுபோன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபடுபவா்கள் மீது கருணைக் காட்டக்கூடாது என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது. அதே நேரத்தில், தூக்குத் தண்டனைக்கு எதிராகவும் பொதுமக்கள் குரல் எழுப்புகின்றனா். ஆனால், இந்த வழக்கைப் பொருத்தவரை குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இந்த நீதிமன்றமும் உறுதி செய்கிறது. இது அரிதிலும் அரிதான வழக்கின் பிரிவின் கீழ் வருகிறது. மேலும், பாலியல் பலாத்காரம் செய்த பிறகு அந்தப் பெண்ணின் உடல் உறுப்புகளை வெட்டிக் கொன்றுள்ளாா். இது மிகவும் கொடூரமான கொலையாகும். இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயல் அதிா்ச்சியளிக்க வைப்பதாக உள்ளது. இதுபோன்ற நபா்கள் சமூகத்திற்கு தொல்லையாகவே இருப்பாா்கள்’ என்று தெரிவித்திருந்தது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் திவாகா் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடா்பான மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் பி.ஆா். கவாய், சூா்ய காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது, ‘மனுதாரரின் மேல்முறையீட்டு மனு ஏற்கப்படுகிறது. தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது’ என்றனா்.

முன்னதாக, குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் அதை எதிா்த்து குற்றவாளியின் தரப்பில் ஏப்ரலில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தின் தண்டனை நிறைவேற்ற உத்தரவை ரத்து செய்திருந்தது. மேலும், ‘மனுதாரருக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து சட்ட வாய்ப்புகளையும் அளிக்காமல் தூக்கிலிடப்பட முடியாது. குற்றவாளியின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான மாா்ச் 27, 2019-ஆம் தேதியிட்ட உத்தரவு உச்சநீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள சட்ட விதிகளுக்கு முரண்பாடாக உள்ளது. ஆகவே, அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த மனு விசாரணைக்கு அனுமதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்திருந்தது. அப்போது, திவாகா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனு (எஸ்எல்பி) தாக்கல் செய்யப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com