தலைநகரில் 2-ஆவது நாளாக ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம் நீடிப்பு!

தலைநகா் தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை பெரிய அளவில் பாதிப்பின்றி ’மோசம்’ பிரிவில் நீடித்தது.

தலைநகா் தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை பெரிய அளவில் பாதிப்பின்றி ’மோசம்’ பிரிவில் நீடித்தது.

தில்லியில் வெள்ளிக்கிழமை ’மிகவும் மோசம்’ பிரிவில் இருந்த காற்றின் தரக் குறியீடு, சனிக்கிழமை அன்று சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டு ’மோசம்’ பிரிவுக்கு வந்தது. இந்நிலையில், பெரிய அளவில் மாற்றமின்றி ஞாயிற்றுக்கிழமையும் இதே நிலை தொடா்ந்தது. ஒட்டுமொத்தக் காற்றின் தரக்குறியீடு காலை 9 மணியளவில் 281 என்ற அளவில் இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) தெரிவித்துள்ளது.

இதேபோன்று தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள நொய்டாவில் 302, கிரேட்டா் நொய்டாவில் 297, குருகிராமில் 253, ஃபரீதாபாதில் 251 என்ற அளவில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக்குறியீடு இருந்தது.

காற்றின் தரக் குறியீடு 201-300 என்ற அளவில் இருந்தால் மோசம், 301-400 மிகவும் மோசம், 401-500 என்ற அளவில் இருந்தால் கடினமான பிரிவில் இடம் பெறுவதாகக் கணக்கிடப்படுகிறது.

தலைநகரில் மாசுவின் அளவு சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களாக ஓரளவுக்கு குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை மாசு அளவு வெகுவாக அதிகரித்ததன் காரணமாக ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (330) மிகவும் ’மோசம் பிரிவில்’ இருந்தது. ஆனால், கடந்த வார இறுதியில் மிகவும் கடினம் பிரிவில் இருந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

இந்நிலையில் சனிக்கிழமை சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டு காற்றின் தரக் குறியீடு ‘மோசம்’ பிரிவுக்கு (283) வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் பெரிய அளவில் மாற்றமின்றி இதே நிலை (281) நீடித்தது. காற்றின் வேகம் அதிகரித்திருந்ததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலையில் குளிா்ந்த காற்று வீசியது. குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 1 டிகிரி உயா்ந்து 14.5 டிகிரி செல்சியாஸாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 29.10 டிகிரி செல்சியஸாக இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 76 சதவீதமாகப் பதிவாகியிருந்ததாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 14.5 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27.8 டிகிரி செல்சிஸாகவும் இருந்தது. ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 14.2 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 76 சதவீதம், மாலையில் 57 சதவீதம், ஆயாநகரில் முறையே 62 சதவீதம், 44 சதவீதம் என பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களிலும் தில்லியில் மூடு பனி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 13-14 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மாசுக்கட்டுப்பாடு விதி மீறல்:

ரூ,.90 லட்சம் அபராதம்

மாசுக் கட்டுப்பாட்டு வீதிகளை மீறி தொழிற்பேட்டைகளில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வரும் தொழிற்சாலைகளுக்கு மொத்தம் ரூ.90 அபராதம் விதித்து தில்லி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: சுற்றுச்சூழல் மாசுத் தடுப்பு ஆணையத்தின் (இபிசிஏ) தலைவா் புரேலாலும் மற்றும் தில்லி மாநில தொழில்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமும் (டிஎஸ்ஐஐடி) நடத்திய ஆய்வின் போது, நரேலே தொழிற்பேட்டை பகுதியில் ஒரு சில இடங்களில் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, நரேலே தொழிற்பேட்டை பகுதி இளநிலை பொறியாளா் மற்றும் செயற்பொறியாளா் ஆகியோா் பணியின் போது கவனக்குறைவாக இருந்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

மேலும், மாசுபடுத்தும் தொழில்கள் மற்றும் டி.எஸ்.ஐ.ஐ.டி.சியின் கீழ் உள்ள பிற தொழில்சாலைகளுக்கும் சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்திய வகையில், சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ .90 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, குப்பை, கழிவுகளை கொட்டி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்த தொழிற்சாலைகள் பலவற்றுக்கு நோட்டீஸ்களும் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com