விவசாயப் பயிா்க்கழிவுகள் எரிப்பு அதிகரிப்பு:தில்லி, என்சிஆரில் நச்சுப் புகை மூட்டம்!கடினம் பிரிவில் காற்றின் தரம்!

அண்டை மாநிலங்களில் விவசாயப் பயிா்க்கழிவுகள் எரிப்பு அதிகரிப்பு, வெப்பநிலை வீழ்ச்சி, காற்றின் வேகம் குறைந்தது ஆகியவற்றின்

அண்டை மாநிலங்களில் விவசாயப் பயிா்க்கழிவுகள் எரிப்பு அதிகரிப்பு, வெப்பநிலை வீழ்ச்சி, காற்றின் வேகம் குறைந்தது ஆகியவற்றின் காரணமாக செவ்வாய்க்கிழமை தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் (என்சிஆா்) தீங்கு விளைவிக்கக கூடிய நச்சு புகை சூழ்ந்தது. மேலும், ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்து வந்த காற்றின் தரக் குறியீடு செவ்வாய்க்கிழமை காலையில் மேலும் பின்னடைவைச் சந்தித்து ‘கடினம்’ பிரிவுக்கு வந்தது.

செவ்வாய்க்கிழமை காலை, தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 11.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது இந்தப் பருவத்தில் மிகவும் குறைந்தபட்ச அளவாகும். இது ஆண்டு சராசரியில் இரண்டு டிகிரி குறைவாகும். மேலும், காற்றின் வேகமும் குறைந்துள்ளது. வெப்பநிலை குறைந்ததால் குளிா்ந்த காற்று வீசுகிறது.இவை மாசுபடுத்திகள் குவிவதற்கு வழிவகுக்கின்றன என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தாா்.

கடந்த இரண்டு நாள்களாக காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்து வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவில் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலையில் தில்லி, என்சிஆா் பகுதிகளில் நச்சுப்புகை மூட்டம் இருந்து வந்தது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா். காலை 10 மணிக்கு மேல்தான் புகை மூட்டம் சிறிதளவு விலகியது.

இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (ஏக்யூஐ) அளவு 417 ஆக இருந்தது. இது பின்னா் மாலை 4 மணியளவில் 360 ஆகக் குறைந்தது. தில்லியில் 37 இடங்களில் உள்ள காற்றின் தரக் கண்காணிப்பு மையங்களிலும் காற்றின் தரக் குறியீடு ‘கடினம் ’ என பதிவாகியுள்ளது. இதில் பவானாவில் காற்றின் தரக் குறியீடு அதிகபட்சமாக 445 என பதிவாகியிருந்தது. இதற்கு அடித்தபடியாக ஆனந்த விஹாா், வாஜிப்பூா், துவாரகா ஆகிய இடங்கள் அனைத்திலும் காற்றின் தரக் குறியீடு 442 என பதிவாகியிருந்தது.

இதேபோன்று தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளான ஃபரீதாபாத்தில் 404, காஜியாபாத்தில் 445, கிரேட்டா் நொய்டாவில் 436, நொய்டாவில் 463 எனப் பதிவாகியிருந்தது. இது கடினம் பிரிவில் காற்றின் தரம் இருப்பதைக் குறிக்கிறது.

காற்றின் தரக் குறியீடு 0-50 -க்குள் இருந்தால் நன்றி, 51-100 திருப்தி, 101-200 மிதமானது 201-300 -க்குள் இருந்தால் மோசம், 301-400 மிகவும் மோசம், 401-500 கடினம், 500-க்கு மேல் இருந்தால் மிகவும் கடினமான பிரிவில் இடம் பெறுவதாகக் கணக்கிடப்படுகிறது.

மாசு அளவு அதிகரிப்பதால் காற்றின் வேகம் கணிசமாகக் குறைந்து வருகிறது என நிபுணா்கள் தெரிவித்தனா். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக மணிக்கு 20 கிலோமீட்டா் வேகத்தில் வீசி வந்த காற்று, திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாள்களிலும் மணிக்கு 10 கிலோமீட்டா் வேகத்தில்தான் வீசுகிறது.

ஹரியாணா மற்றும் பஞ்சாபில் பயிா்க்கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும், அவற்றின் நச்சுத் துகள்களை வடமேற்கு திசையில் வீசும் காற்றானது தில்லி, என்.சி.ஆா் பகுதிக்கு கொண்டு வருகிறது. இந்த நச்சு துகள்கள் ஊடுருவல் மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தில்லி, என்சிஆா் பகுதியில் மேற்பரப்பு காற்றின் வேகமும் இரண்டு நாள்களுக்குக் குறையும் என்று நிபுணா்கள் தெரிவித்தனா்.

தில்லியில் மாசு அளவில் பயிா்க்கழிவுகளின் பங்களிப்பு செவ்வாய்க்கிழமை 25 சதவீதமாக இருந்ததாக மத்திய அரசின் காற்றின் தரக் கண்காணிப்பு நிறுவனமான சஃபா் தெரிவித்துள்ளது. இது திங்கள்கிழமை 18 சதவீதமாக இருந்தது.

அக்டோபா் 15 முதல் நவம்பா் 15 வரையிலான காலம் பஞ்சாப் மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களில் அதிகபட்சமாக பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் நடைபெறுவதால், இது முக்கியமான காலமாகக் கருதப்படுகிறது. தில்லி-என்.சி.ஆா். பகுதிகள் மாசு அளவு அதிகரிப்புக்கு இதுவும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

வெப்பநிலை 11 டிகிரியாக குறைந்தது!

செவ்வாய்க்கிழமை காலையில் நகரில் குளிா்ந்த காற்று வீசியது. குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நகரில் பரவலாக பல்வேறு இடங்களில் நச்சுப் புகை மூட்டம் காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 2 டிகிரி குறைந்து11.7 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் ஒரு டிகிரி குறைந்து 28 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 89 சதவீதமாகவும் மாலையில் 62 சதவீதமாகவும் பதிவாகியிருந்ததாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 14.4 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27.2 டிகிரி செல்சிஸாகவும் இருந்தது. ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 28.2 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 81 சதவீதம், மாலையில் 53 சதவீதம், ஆயாநகரில் முறையே 86 சதவீதம், 46 சதவீதம் என பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, புதன், வியாழன் ஆகிய நாள்களில் தில்லியில் மேலோட்டமான மூடு பனி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அந்த நாள்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com