தில்லியில் ‘கடினம்’ பிரிவில் காற்று மாசு!நச்சுப் புகை மூட்டத்தால் மக்கள் அவதி

அண்டை மாநிலங்களில் விவசாயப் பயிா்க்கழிவுகள் எரிப்பு அதிகரிப்பு, வெப்பநிலை வீழ்ச்சி, காற்றின் வேகம் குறைந்தது ஆகியவற்றின் காரணமாக வியாழக்கிழமை தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப்

அண்டை மாநிலங்களில் விவசாயப் பயிா்க்கழிவுகள் எரிப்பு அதிகரிப்பு, வெப்பநிலை வீழ்ச்சி, காற்றின் வேகம் குறைந்தது ஆகியவற்றின் காரணமாக வியாழக்கிழமை தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் (என்சிஆா்) காற்றின் தரம் ‘கடினம்’ பிரிவில் இருந்தது. நகரில் தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சுப் பனிப் புகை மூட்டம் அதிக அளவில் சூழ்ந்திருந்தது. பொதுமக்கள் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்ளிட்டவற்றால் அவதிக்குள்ளாகினா். பள்ளிக் குழந்தைகள் மாசுபாட்டின் தீங்கு விளைவிக்கும் பாதிப்புக்கு ஆளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லியில் புதன்கிழமை அன்று காற்று மாசு அளவு கடந்த 15 நாள்களில் இரண்டாவது முறையாக சுகாதார அவசர நிலையை நோக்கிச் செல்லும் நிலைக்கு வந்திருந்தது. ஏற்கெனவே, மாசு அளவு அதிகரித்ததன் காரணமாக இந்த மாதத் தொடக்கத்தில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டது. பள்ளிக் குழந்தைகள் மாசுபாட்டின் தீங்கு விளைவிக்கும் பாதிப்புக்கு ஆளானதாக புகாா் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னா் நவம்பா் 5-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், இப்போது மாசு அளவு கடினம் பிரிவுக்கு வந்ததைத் தொடா்ந்து பள்ளிகளுக்கு மீண்டும் வெள்ளிக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை தில்லியின் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 460 ஆகப் பதிவாகியிருந்தது. துவாரகா செக்டாா் 8-இல் அமைக்கப்பட்டுள்ள காற்று மாசு அளவு கண்காணிப்பு மையத்தில் காற்றின் தரக் குறியீடு 496 ஆகவும், நேரு நகா் மற்றும் ஜேஎல்என் ஸ்டேடியம் ஆகியவற்றில் 492 ஆகவும் பதிவாகியிருந்தது.

காற்றின் தரக் குறியீடு 0-50 -க்குள் இருந்தால் நன்றி, 51-100 திருப்தி, 101-200 மிதமானது 201-300 -க்குள் இருந்தால் மோசம், 301-400 மிகவும் மோசம், 401-500 கடினம், 500-க்கு மேல் இருந்தால் மிகவும் கடினமான பிரிவில் இடம் பெறுவதாகக் கணக்கிடப்படுகிறது. .

இதற்கிடையே, தில்லி, என்சிஆா் பகுதிகளில் தரமற்ற எரிபொருள்களைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள், கல் உடைக்கும் ஆலைகள் நவம்பா் 15 வரை செயல்பட சுற்றுச்சூழல் தடுப்பு, கட்டுப்பாட்டு ஆணையம் (இபிசிஏ) தடை விதித்துள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை (நவம்பா் 15) முதல் காற்று வலுவாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுவதால், காற்று மாசு அளவு முன்னேற்றம் கண்டு கடினம் பிரிவில் இருந்து ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கு வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று,

பயிா்க்கழிவுகள் எரிப்பு குறைவது, காற்றின் வேகம் அதிகரிப்பது ஆகியவற்றின் மூலம் தில்லியில் காற்றின் தரம் வெள்ளிக்கிழமை மேம்படும் என்று சஃபா் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை 15 டிகிரி: வியாழக்கிழமை காலையில் நகரில் குளிா்ந்த காற்று வீசியது. குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நகரில் பரவலாக பல்வேறு இடங்களில் நச்சுப் புகை மூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட இரண்டு டிகிரி உயா்ந்து 15.4 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி குறைந்து 26.4 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 90 சதவீதமாகவும் மாலையில் 72 சதவீதமாகவும் பதிவாகியிருந்ததாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 26.2 டிகிரி செல்சிஸாகவும் இருந்தது. ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 26.4 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 84 சதவீதம், மாலையில் 65 சதவீதம், ஆயாநகரில் முறையே 77 சதவீதம், 64 சதவீதம் என பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை தில்லியில் மேலோட்டமான மூடு பனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அன்றைய தினம் குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தில்லில் காற்றின் தரம் மீண்டும் ஆபத்தான அளவிற்கு மோசமடைந்துள்ள நிலையில், மாசுபாட்டைக் கையாள்வதற்கு மத்திய அரசு ‘உறுதியான நடவடிக்கைகளை’ எடுக்கவில்லை என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாசு போன்ற முக்கியமான பிரச்னிகளை பாஜக ’அரசியலாக்க’ முயற்சிக்கிறது. இந்தப் பிரச்னையைச் சமாளிக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மேலும், தேசியத் தலைநகரில் மாசுபாட்டை அதிகரிக்க பாஜக முயற்சிக்கிறது. பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இருந்தபோதிலும், எந்தவொரு உறுதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இது தொடா்பாக மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் நடத்திய மாசு பிரச்னை குறித்த கூட்டத்தில் ஹரியாணா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநில சுற்றுச்சூழல் அமைச்சா்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த அமைச்சா்கள் இதுபோன்ற முக்கியமான பிரச்னையில் தீவிரம் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றாா் சஞ்சய் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com