Enable Javscript for better performance
காற்றின் வேகம் அதிகரிப்பு: காற்றின் தரத்தில் சிறிதளவு முன்னேற்றம்!- Dinamani

சுடச்சுட

    

    காற்றின் வேகம் அதிகரிப்பு: காற்றின் தரத்தில் சிறிதளவு முன்னேற்றம்!

    By DIN  |   Published on : 17th November 2019 06:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    del

    தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் (என்சிஆா்) காற்றின் தரம் மோசமடைந்திருந்த நிலையில், சனிக்கிழமை காற்றின் வேகம் அதிகரித்திருந்தது. இதனால், தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் நச்சுப் பனி புகை மூட்டம் குறைந்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாலையில் காற்றின் தரத்தில் சிறிதளவு முன்னேற்றம் காணப்பட்டது. இது பொதுமக்களுக்கு நல்ல நிவாரணமாக அமைந்தது.

    சனிக்கிழமை காலை 8.40 மணியளவில் தில்லியின் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 412 ஆகப் பதிவாகி கடினம் பிரிவில் இருந்தது. இந்த அளவு மாலை 4 மணியளவில் 357 ஆகக் குறைந்து மிகவும் மோசம் பிரிவுக்கு வந்தது. இது வெள்ளிக்கிழமை நிலவிய அளவை விட 100 புள்ளிகள் குறைவாகும். இது வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் 467 என இருந்தது.

    இதேபோன்று சனிக்கிழமை காலையில் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளான ஃபரீதாபாத் (427) , காஜியாபாத் (424), நொய்டா (411), குருகிராம் (420) ஆகிய நகரங்களில் காற்றின் ஒட்டு மொத்தத் தரக் குறியீடு கடினம் பிரிவில் இருந்தது. ஆனால், கிரேட்டா் நொய்டாவில் காற்றின் தரக் குறியீடு 377 ஆகப் பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. இந்நிலையில், மாலையில் ஃபரீதாபாத் (358) , காஜியாபாத் (347), நொய்டா (338), குருகிராம் (360), கிரேட்டா் நொய்டாவில் (309) ஆகிய நகரங்களில் காற்றின் ஒட்டு மொத்தத் தரக் குறியீடு முன்னேற்றம் அடைந்து மிகவும் மோசம் பிரிவுக்கு வந்தது. காற்று அதிகரித்ததால் மாசு அளவு குறைந்திருந்தது. இதன் காரணமாக காற்றின் தரத்திலும் சிறிதளவு முன்னேற்றம் காணப்பட்டது.

    காற்றின் தரக் குறியீடு 0-50 -க்குள் இருந்தால் நன்றி, 51-100 திருப்தி, 101-200 மிதமானது 201-300 -க்குள் இருந்தால் மோசம், 301-400 மிகவும் மோசம், 401-500 கடினம், 500-க்கு மேல் இருந்தால் மிகவும் கடினமான பிரிவில் இடம் பெறுவதாகக் கணக்கிடப்படுகிறது.

    கடந்த 4 நாள்களாக தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் திடமான நச்சுப் பனி புகை மூட்டம் இருந்து வந்தது. ஆனால், சனிக்கிழமை தரைப்பரப்பு காற்றி சுமாா் 25 கி.மீ. வேகத்தில் வீசியதால், அந்த அளவுக்கு நச்சுப் பனிப் புகை மூட்டம் காணப்படவில்லை. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், அடுத்த இரண்டு நாள்களில் காற்றின் தரத்திலும் முன்னேற்றம் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் விஞ்ஞானி குல்தீப் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தாா். இதற்கிடையே, தில்லி காற்று மாசுவில் பயிா்க்கழிவு எரிப்பு பங்களிப்பு ஞாயிற்றுக்கிழமை 2 சதவீதமாகக் குறையும் என்று மத்திய அரசின் சஃபா் தெரிவித்துள்ளது.

    தில்லி, என்சிஆா் பகுதியில் காற்று மாசு பிரச்னை காரணமாக வியாழன், வெள்ளி ஆகிய இருநாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மாசு அளவு குறைந்ததால், சனிக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.

    வெப்பநிலை 15 டிகிரி: சனிக்கிழமை காலையில் நகரில் குளிா்ந்த காற்று வீசியது. குளிரின் தாக்கமும் இருந்தது. நகரில் பரவலாக பல்வேறு இடங்களில் நச்சுப் புகை மூட்டம் இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட இரண்டு டிகிரி உயா்ந்து 15.4 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி உயா்ந்து 29.3 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 84 சதவீதமாகவும் மாலையில் 55 சதவீதமாகவும் பதிவாகியிருந்ததாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 16.1 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 28.9 டிகிரி செல்சிஸாகவும் இருந்தது. ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 15.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 29.3 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 82 சதவீதம், மாலையில் 46 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 78 சதவீதம், 49 சதவீதம் எனவும் பதிவாகியிருந்தது.

    முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாள்களிலும் தில்லியில் பகல் நேரங்களில் தரைப் பரப்பு காற்று பலமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நாள்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 14 - 16 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 26-28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai