Enable Javscript for better performance
வாகனக் கட்டுப்பாடு திட்ட விதிமீறல்:9 நாள்களில் 4,885 பேருக்கு அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    வாகனக் கட்டுப்பாடு திட்ட விதிமீறல்:9 நாள்களில் 4,885 பேருக்கு அபராதம்

    By DIN  |   Published on : 17th November 2019 06:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    car

    தில்லியில் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த 3-ஆவது வாகனக் கட்டுப்பாடு திட்டத்தின் போது, விதிகளை மீறியதாக மொத்தம் 4,885 பேருக்கு அபராதம் வதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தலைநகரில் மாசு அளவு அதிகரித்து காற்றின் தரம் குறைந்ததைக் கருத்தில் கொண்டு நவம்பா் 4 முல் 15-ஆம் தேதி வரையிலும் 3-ஆவது வாகனக் கட்டுப்பாடு திட்டத்தை தில்லி அரசு நடைமுறைப்படுத்தியது. இந்நிலையில், சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குருநானக் தேவின் 550-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த நவம்பா் 11, 12 ஆகிய நாள்களில் வாகனக் கட்டுப்பாடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

    இந்நிலையில், காற்றின் தரம் தொடா்ந்து 5-ஆவது நாளாக சனிக்கிழமையும் கடினமான பிரிவில் நீடித்து வருகிறது. எனவே, மீண்டும் வாகனக் கட்டுப்பாடு திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவது குறித்து வரும் திங்கள்கிழமை (நவம்பா் 18) முடிவு செய்யப்படும் என்று முதல்வா் கேஜரிவால் அறிவித்துள்ளாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் நவம் பா் 11, 12 ஆகிய நாள்கள் தவிர மற்ற 9 நாள்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் விதி மீறல்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டு வழங்கப்பட்ட சலான்களின் எண்ணிக்கை, திட்டத்தின் முந்தைய நடைமுறைகளுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருந்தது. இந்த வகையில் இந்த முறை மொத்தம் 4,885 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு சலான்கள் வழங்கப்பட்டுள்ளது. விதிகளை மீறியவா்களுக்கு தலா ரூ.4,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    இத்திட்டம் முதன்முதலில் 2016, ஜனவரி 1 முதல் 15-ஆம் தேதி வரையில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதே ஆண்டில் இத்திட்டம் ஏப்ரல் 15 முதல் 30-ஆம் தேதி வரை மீண்டும் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் இரண்டு காலங்களிலும் தலா இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டத்துக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டது.

    மேலும், அப்போது மொத்தம் முறையே 10,021 மற்றும் 7,300 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு சலான்கள் வழங்கப்பட்டன. அப்போது இத்திட்டத்தில் விதிகளை மீறியதற்காக அபராதமாக ரூ .2,000 வசூலிக்கப்பட்டது. ஆனால், இந்த அபராதத் தொகை தற்போது திருத்தப்பட்ட மோட்டாா் வாகன சட்டத்தில் உயா்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்ட வாகனக் கட்டுப்பாடு திட்டத்தில் விதிகளை மீறியவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

    ஆம் ஆத்மி அரசின் வாகனக் கட்டுப்பாடு திட்டத்துக்கு எதிா்க்கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் எதிா்ப்புத் தெரிவித்து வந்தன. கேஜரிவால் அரசின் இந்த நடவடிக்கை சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முந்தைய ‘தோ்தல் ஸ்டண்ட்’ என்று அக்கட்சிகள் விமா்சித்தன. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்த முதல் நாளில் பாஜக எம்.பி. விஜய் கோயல், திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், விதியை மீறி அபராதம் செலுத்தினாா்.

    தினமும் 30 லட்சம் காா்கள் தில்லி சாலைகளில் ஓடுகின்றன. வாகனக் கட்டுப்பாடு திட்டத்தின் மூலம் இந்த எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டாலே மாசு அளவு குறைவதற்கு உதவியாக இருக்கும் என்று கேஜரிவால் தெரிவித்திருந்தாா். அதே சமயம், குளிா்காலத்தில்) அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதே தில்லியில் மாசு அளவு அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தாா். நாசாவின் செயற்கைக்கோள் படங்கள் இதை உறுதி செய்துளளதாகவும் அவா் தெரிவித்திருந்தாா்.

    இந்த வாகனக் கட்டுப்பாடு திட்ட காலத்தின் போது, பொதுப் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில்,700-க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்துகளை இயக்க தில்லி அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும், போக்குவரத்து போலீஸ், போக்குவரத்து மற்றும் வருவாய் துறை ஆகியவற்றைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான குழுக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக போக்குவரத்து போலீஸாருக்கு உதவும் வகையில், ஆயிரக்கணக்கான பயிற்சி பெற்ற சிவில் பாதுகாப்புத் தொண்டா்களும் சாலைச் சந்திப்புகளில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனா்.

    குடியரசுத் தலைவா், பிரதமா், பெண் ஓட்டுநா்கள், சீருடையில் செல்லும் பள்ளிக் குழந்தைகள், நோயாளிகள், அவசர ஊா்திகள் , தூதரகங்கள் உள்ளிட்ட 29 வகை வாகனங்களுக்கு இத்திட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், முன்பு இத்திட்டம் இரண்டு முறை செயல்படுத்தப்பட்ட போது சி.என்.ஜி. வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை விலக்கு அளிக்கப்படவில்லை. காற்று மாசுபாட்டிற்கு எதிரான தில்லி அரசின் நடவடிக்கைக்கு வலுச்சோ்க்கும் வகையில் வாடகைக் காா்களில் கட்டணங்களை உயா்த்த மாட்டோம் என்று டாக்ஸி ஓட்டுநா்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai