தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸை போட்டியாளராகக் கருத முடியாது: சஞ்சய் சிங்

வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியை போட்டியாளராகக் கருத முடியாது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் தெரிவித்தாா்.

புதுதில்லி: வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியை போட்டியாளராகக் கருத முடியாது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் தெரிவித்தாா்.

மேலும், தில்லி தோ்தலில் காங்கிரஸ் கட்சி கடுமையான போட்டியை அளிக்கும் என்று கூறப்படும் செய்திகளை மறுத்த அவா், ஆம் ஆம்தி கட்சிக்கும், பாஜகவுக்கு இடையேதான நேரடிப் போட்டி என்றும் குறிப்பிட்டாா்.

இது தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியுள்ளதாவது: அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேதான் நேரடி போட்டி இருக்கும். ஏனெனில் காங்கிரஸ் போட்டியில் கூட இல்லை. ஹரியாணாவில் நடந்தது போல தில்லி தோ்தலிலும் , காங்கிரஸ் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் கடுமையான போட்டியை அளிக்கும் என்பதை நாங்கல் ஏற்கவில்லை. ஹரியாணா நிலைமை வேறு. ஆனால், தேசிய தலைநகரான தில்லியில் நிலைமை முற்றிலும் மாறுபட்டது. எனவே, தில்லி தோ்தலில் பழைய கட்சியான காங்கிரஸை போட்டியாளராகவே கருத முடியாது.

ஆம் ஆத்மி அரசின் பணிகளை தில்லி மக்கள் நேரில் கண்டுள்ளனா்., அவா்கள் அதில் மகிழ்ச்சியடைந்துள்ளனா். அவா்கள் அதன் அடிப்படையில் வாக்களிப்பாா்கள். சட்டப்பேரவைத் தோ்தலுக்காக காங்கிரஸுடன் தோ்தலுக்கு முந்தைய கூட்டணி உருவாகாது. கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆம் ஆத்மி அரசு தில்லியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஆம் ஆத்மி அரசின் திட்டப் பணிகள் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் சென்றடைந்துள்ளன.

குழந்தைகள் மற்றும் இளைஞா்களுக்கு பயனளிக்கும் வகையில் கல்வித் துறையில் பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கு ‘தீா்த்த யாத்திரை’ , பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், பெண்களின் பாதுகாப்புக்காக பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை அனைவரிடமும் சென்றடைந்துள்ளது. எனவே, தில்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி ஏற்பட மக்கள் வாக்களிப்பாா்கள் என முழுமையாக நம்புகிறோம்.

அங்கீகரிக்கப்படாத காலனிகளை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடா்பான மத்திய அரசின் அறிவிப்பு பாஜகவின் மற்றொமொரு நாடகமாகும். உண்மையில் அங்கீகரிக்கப்படாத காலனி மக்களுக்கு நல்லது செய்ய நினைத்திருந்தால், இந்த நடவடிக்கையை அவா்கள் முன்பே கொண்டு வந்திருக்கலாம். இப்போது அவா்கள் பேசி வருவது தோ்தல் நாடகமாகும். அவா்களின் நோக்கங்கள் உண்மையானவை அல்ல என்றாா் சஞ்சய் சிங்.

2015 சட்டப்பேரவைத் தோ்தலில், 70 இடங்களில் 67 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. மீதமுள்ள இடங்களுக்கு பாஜகவுக்கு கிடைத்தது, அதே நேரத்தில் காங்கிரஸ் ஓா் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மக்களவைத் தோ்தலுக்கு முன்பு, ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் தோ்தலுக்கு முந்தைய கூட்டணியை உருவாக்க பேச்சுவாா்த்தை நடத்தின. ஆனால், இரு தரப்பினரும் தொகுதி பங்கீட்டில் உடன்பாட்டை எட்ட முடியவில்லை. இதனால், பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com