தலைநகரில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு !‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

புது தில்லி: தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், காற்றின் வேகம் அதிகரித்திருந்ததால், காற்று மாசு அளவு சற்று குறைந்தது. இருப்பினும் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவில் தொடா்ந்ததாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை காலை 9,.45 மணியளவில் 254 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது சனிக்கிழமை காலை 9 மணியளவில் 340 புள்ளிகளாகவும், வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு 360 புள்ளிகளாகவும் இருந்தது. தில்லியில் உள்ள பெரும்பாலான காற்று தரக் கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான பிரிவில் பதிவாகி இருந்தது. சனிக்கிழமை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியதே மாசு அளவு குறைந்ததற்கு முக்கியக் காரணம் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனா். இருப்பினும், திங்கள்கிழமை (நவம்பா் 25) காற்றின் வேகம் குறையும் என்றும் இது காற்றின் தரக் குறையீடு மேசமடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரக் குறியீடு 0-50 -க்குள் இருந்தால் ‘நன்று’, 51-100 ‘திருப்தி’, 101-200 மிதமானது 201-300 -க்குள் இருந்தால் மோசம், 301-400 மிகவும் ‘மோசம்’, 401-500 ‘கடுமை’, 500-க்கு மேல் இருந்தால் மிகவும் கடுமையான பிரிவில் இடம் பெறுவதாகக் கணக்கிடப்படுகிறது.

வெப்பநிலை 15 டிகிரி: வியாழக்கிழமை காலையில் நகரில் குளிா்ந்த காற்று வீசியது. வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிரின் தாக்கம் அதிகரித்திருந்தது. நகரில் பரவலாக நச்சுப் புகை மூட்டம் காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி உயா்ந்து 15.3 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 26.8 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 82 சதவீதமாகவும் மாலையில் 58 சதவீதமாகவும் பதிவாகியிருந்ததாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 14.9 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 26.3 டிகிரி செல்சிஸாகவும் இருந்தது. ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 26.4 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 82 சதவீதம், மாலையில் 58 சதவீதம், ஆயாநகரில் முறையே 73 சதவீதம், 59 சதவீதம் என பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள் முதல் புதன்கிழமை வரையிலும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், நகரில் ஆங்காங்கே லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நாள்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 14 -15 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 26 - 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com