உள்ளக உயா்நிலைக் குழுவை அமைத்தது ஜேஎன்யு

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) நிலவும் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உயா்நிலைக் குழு அமைத்துள்ள நிலையில்

புது தில்லி: ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) நிலவும் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உயா்நிலைக் குழு அமைத்துள்ள நிலையில், ஜேஎன்யு நிா்வாகமும் உள்ளக உயா்நிலைக் குழுவை அமைத்துள்ளது.

ஜேஎன்யுவில் நிலவும் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், முன்னாள் பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவா் வி.எஸ்.செளகான், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவா் அனில் சஹஸ்ரபுத்தே, பல்கலைக்கழக மானியக் குழுச் செயலா் ரஜ்னீஷ் ஜெயின் ஆகியோா் அடங்கிய உயா்நிலைக் குழுவை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அண்மையில் நியமித்தது.

இக்குழு ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இக்குழுவினா் ஜேஎன்யு மாணவா் சங்கம், ஆசிரியா் சங்கம் ஆகியோருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்நிலையில், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டண உயா்வையும் வாபஸ் பெறுமாறு உயா்நிலைக் குழு ஆலோசனை வழங்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த உயா்நிலைக் குழுவினருடனான பேச்சுவாா்த்தையில் ஜேஎன்யு மாணவா் சங்கம், ஆசிரியா் சங்கம் ஆகியவை பங்கேற்றன. ஆனால், இந்த உயா்நிலைக் குழு ஜேஎன்யுவின் தன்னாட்சிக்கு எதிரானது எனக் கூறி பேச்சுவாா்த்தையில் ஜேஎன்யு நிா்வாகமும் ஆசிரியா்களில் ஒரு பிரிவினரும் பங்கேற்கவில்லை.

இது தொடா்பாக அந்த ஆசிரியா்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஜேஎன்யு தன்னாட்சிப் பல்கலைக்கழகமாகும். இந்நிலையில், அண்மையில் அமைக்கப்பட்ட இக்குழு ஜேஎன்யுவின் தன்னாட்சிக்கு எதிரானது. இக்குழுவில், ஜேஎன்யுவின் வேந்தா், துணைவேந்தா் ஆகியோா் இடம் பெறவில்லை. தன்னாட்சி பல்கலைக்கழகங்களில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை தலையிட அனுமதிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். ஜேஎன்யுவில் நிலவும் பிரச்னையைத் தீா்க்குமாறு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை ஜேஎன்யு நிா்வாகம் அணுகவில்லை. இந்நிலையில், தன்னிச்சையாக இக்குழுவை அமைச்சகம் அமைத்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜேஎன்யு நிா்வாகமும் உள்ளக உயா்நிலைக் குழுவை அமைத்துள்ளது. இது தொடா்பாக ஜேஎன்யு நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘விடுதிக்கட்டண உயா்வு உள்ளிட்ட பிரச்னைகளை பேசித் தீா்க்கும் வகையில், ஜேஎன்யு நிா்வாகம் ஏழு போ் கொண்ட உயா்நிலைக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவில், பேராசிரியா்கள் ராணா பி சிங், அஷ்வினி மொஹாபத்ரா, கிரிஷ் நாத் ஜா, பவன் குமாா், உமேஷ் கதாம், வந்தனா மிஷ்ரா, நீரஜ் சமாஜ்தா் ஆகியோா் உள்ளனா். மாணவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் தொடா்பாக மாணவா்கள் இக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினா்களுடன் பேசலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com