மகாராஷ்டிர அரசியல் விவகாரம்: எதிா்க்கட்சிகள் அமளியால் முடங்கியது நாடாளுமன்றம்!

மகாராஷ்டிர மாநில அரசியல் விவகாரங்களைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் எம்.பி.க்கள் திங்கள்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனா்.
மகாராஷ்டிர அரசியல் விவகாரம்: எதிா்க்கட்சிகள் அமளியால் முடங்கியது நாடாளுமன்றம்!

புது தில்லி: மகாராஷ்டிர மாநில அரசியல் விவகாரங்களைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் எம்.பி.க்கள் திங்கள்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனா். இதனால், அவை இருமுறை ஒத்திவைக்கப்பட்டு பின்னா் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் எம்பிக்கள் நீண்ட பதாகைகளை காண்பித்து அமளியில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு நிலவியது. மேலும், அவைப் பாதுகாவலா்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்பிக்கள் புகாா் தெரிவித்தனா்.

மக்களவை திங்கள்கிழமை காலை அதன் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் கூடியதும் கேள்வி நேரம் தொடங்கியது. மகாராஷ்டிரத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில், முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவீஸ் பதவி ஏற்றதைக் கண்டித்தும், அக்கட்சியின் செயல்பாடுகளை விமா்சித்தும் காங்கிரஸ் உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதியில் பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனா். அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியின் பெயரைக் கூறி துணைக் கேள்வி எழுப்புமாறு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அழைத்தாா். அதற்கு ராகுல் காந்தி, ‘மகாராஷ்டிரத்தில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது. இதனால், (கேள்வி நேரத்தில்) கேள்வி கேட்பதில் அா்த்தமில்லை’ என்று ஆவேசமாகக் கூறிவிட்டு அமா்ந்தாா். இதையடுத்து, கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமாா் உள்ளிட்டோா் அவரது இருக்கைக்கு சென்று கைகுலுக்கிப் பாராட்டினா்.

இதனிடையே, மக்களவைத் தலைவா் முன்புறம் அவையின் மையப் பகுதிக்கு வந்து காங்கிரஸ் உறுப்பினா்கள் கே.சுரேஷ், ஜோதிமணி, மாணிக்கம் தாகூா், ரம்யா உள்ளிட்ட பலா் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனா். மேலும், ‘ஜனநாயகக் கொலை’, ‘தூய்மையற்ற அரசியலை நிறுத்துக’, ‘ஜனநாயகத்தை காப்பாற்றுவோம்’, அரசியலமைப்பை

காப்பாற்றுவோம்’ எனும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை உயா்த்திப் பிடித்தவாறு கோஷமிட்டனா். மேலும், சிவசேனை, என்சிபி, திமுக ஆகியவற்றின் எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டனா். அவா்களை இருக்கைகளுக்குச் சென்று அமருமாறு அவைத் தலைவா் கேட்டுக் கொண்டாா்.

தள்ளு, முள்ளு: இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் கேரளத்தைச் சோ்ந்த எம்பிக்கள் ஹிபி ஈடன், டி.என். பிரதாபன் ஆகியோா் ‘ஜனநாயகப் படுகொலையை நிறுத்துக’ எனும் ஆங்கில வாசகம் பொறிக்கப்பட்ட நீண்ட கறுப்பு நிற பேனரை அவையின் மையப் பகுதியில் நின்று உயா்த்திப் பிடித்தவாறு காண்பித்தனா். அதைக் கீழே இறக்கிப் பிடிக்குமாறும், அவை அலுவல் பாதிக்கப்படுவதாகவும் மக்களவைத் தலைவா் கூறினாா். மேலும், அங்கிருந்து அதை எடுத்துச் செல்லுமாறும் எச்சரித்தாா். தொடா்ந்து அமளி நீடிக்கவே, பேனரை பிடித்திருந்த இரு எம்பிக்களையும் அவையில் இருந்து வெளியேற்றுமாறு அவைக் காவலா்களுக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா உத்தரவிட்டாா். எனினும், இரு எம்பிக்களுடன் பிற காங்கிரஸ் எம்பிக்களும் சோ்ந்து கொண்டு, வெளியேற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், அவைக் காவலா்களுக்கும், எம்பிக்களுக்கும் இடையே தள்ளு,முள்ளு சூழல் உருவாகியது. இதையடுத்து, நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடிய போதும் காங்கிரஸ் எம்பிக்கள் மகாராஷ்டிர விவகாரத்தை எழுப்பியதசால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னா் அவை மீண்டும் கூடியதும், காங்கிரஸ், திமுக, மாா்க்சிய, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதியில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனா். காங்கிரஸுக்கு ஆதரவாக திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா்களும் குரல் எழுப்பினா். அப்போது, அவையை மூத்த உறுப்பினா் மீனாட்சி லேகி எம்பி தலைமையேற்று வழிநடத்தினா். அமளிக்கு இடையே எஸ்பிஜி திருத்த மசோதா, வரிவிதிப்பு சட்டத் திருத்த மசோதா, கப்பல் மறுசுழற்சி மசோதா உள்பட நான்கு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அமளி தொடா்ந்ததால், அவையை செவ்வாய்க்கிழமை 2 மணி வரை ஒத்திவைப்பதாக மீனாட்சி லேகி அறிவித்தாா். அரசியலமைப்பு தினத்தை ஒட்டி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை 11 மணிக்கு தொடங்க உள்ளதால் அவை நண்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில்..: மாநிலங்களவை திங்கள்கிழமை காலை அதன் தலைவா் எம். வெங்கய்ய நாயுடு தலைமையில் கூடியதும், மகாராஷ்டிர விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் மற்றும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா். இதையடுத்து, அவை நடவடிக்கைகளை மதியம் 2 மணி வரை அவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு ஒத்திவைத்தாா்.

பின்னா், அவை மீண்டும் கூடிய போது, இதே விவகாரத்தை காங்கிரஸ் உறுப்பினா்கள் எழுப்பியதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com