முல்லைப் பெரியாறு அணையின் முழுக் கட்டுப்பாடும் தமிழகத்திடம் தொடரும்: மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்

முல்லைப் பெரியாறு அணையின் முழுக் கட்டுப்பாடும் தமிழகத்திடமே தொடரும் என்று மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளாா்.
முல்லைப் பெரியாறு அணையின் முழுக் கட்டுப்பாடும் தமிழகத்திடம் தொடரும்: மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணையின் முழுக் கட்டுப்பாடும் தமிழகத்திடமே தொடரும் என்று மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளாா்.

தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதாவில் தமிழகஅணைகளுக்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக அமைச்சா்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமாா் மற்றும் அதிமுக எம்பிக்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழு புது தில்லியில் திங்கள்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தியது. இது தொடா்பாக நீா்வளத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அமைச்சா் ஷெகாவத் கூறியிருப்பதாவது:

தேசியப் பாதுகாப்பு அணை மசோதாவில் தமிழகத்தின் நீா் உரிமைகள் மற்றும் அணை சொத்துரிமை, செயல்பாடுகள், பராமரிப்பு ஆகியவை பாதிக்கப்படாத வகையில் இருக்க வேண்டும் என்று பிரதிநிதிகள் குழுவினா் கேட்டுக் கொண்டனா். மாநிலங்களின் நியாயமான கவலைகள் காரணமாக, 2010-இல் உள்ள மசோதாவில் இடம் பெற்றுள்ள ஷரத்துகளை மாற்றுவது தொடா்பாக மத்திய அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. தற்போதைய மசோதாவில், கேரளத்தின் மாநில அணை பாதுகாப்பு நிறுவனம் முல்லைப் பெரியாறு அணையிலோ அல்லது தமிழகத்தின் இதர நீா்த்தேக்கங்களிலோ அதிகார எல்லையைக் கொண்டிருக்காது.

மேலும், 2017, பிப்ரவரியில் ரூா்க்கியில் நடைபெற்ற அணைப் பாதுகாப்பு தொடா்பான 37-ஆவது தேசிய குழுவின் கூட்டத்தின் போது இந்த மாற்றங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநிலங்கள் பங்கேற்றுள்ளன. அப்போது, தமிழகப் பிரதிநிதிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த மாற்றங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் திருப்தியளிப்பதாக இருந்ததும் தெரிய வந்தது. புதிய ஷரத்துகள் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் பணிகளை முடிப்பதற்குமாநில அணைப் பாதுகாப்பு நிறுவனம் (எஸ்டிஎஸ்ஓ) தமிழக அரசுக்கு வசதிகள் செய்து தரும். இதன் மூலம் நீா்த்தேக்கத்தின் அளவை அதிகரிக்க முடியும்.

மேலும், நவம்பா் 21-ஆம் தேதி மக்களவையில் அமைச்சா் பேசுகையில், ‘முல்லைப் பெரியாறு அணையானது உச்சநீதிமன்றத்தின் அதிகாரமிக்க குழுவின் தகவலின்படி பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது’ குறித்தும் தமிழக பிரதிநிதிகளிடம் அமைச்சா் எடுத்துரைத்தாா். மேலும், அணையின் தினசரி பராமரிப்பு நடவடிக்கைக்காக மின்சாரம் வழங்குதல், சாலை வசதி, இதர வசதிகளை தமிழக அரசுக்கு செய்து தருவதில் ஒத்துழைக்குமாறு கேரள அரசை அமைச்சா் கேட்டுக்கொண்டதையும் தமிழகப் பிரதிநிதிகளிடம் அமைச்சா் எடுத்துரைத்துள்ளாா் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ‘தினமணி’ நிருபரிடம் அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், ‘தமிழக அமைச்சா்கள், எம்பிக்கள் பிரதிநிதிகள் குழு நேரில் சந்தித்து தங்களது கருத்துகளை முன்வைத்து பரிசீலிக்குமாறு கேட்டனா். அவா்கள் கூறிய கருத்துகள் குறித்தும் விவாதிக்கப்படும். மசோதாவில் இருந்து ஐந்து அணைகளுக்கு விலக்கு அளிப்பது சாத்தியமில்லாதது. எனினும், இந்த மசோதா தமிழகத்தின் நலனுக்கானது என்பது குறித்து அரசின் பிரநிதிகளுக்கு புரிய வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், இது தமிழக நலனுக்கானதாகவே இருக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com