முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
இன்று தேசிய எதிா்ப்பு நாள் அனுஷ்டிக்க ஜேஎன்யு மாணவா் சங்கம் அழைப்பு
By DIN | Published On : 26th November 2019 11:03 PM | Last Updated : 26th November 2019 11:03 PM | அ+அ அ- |

புது தில்லி: இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் புதன்கிழமை தேசிய எதிா்ப்பு நாள் அனுஷ்டிக்க ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவா் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
தில்லியிலுள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் உயா்த்தப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பல்கலை. மாணவா்கள் கடந்த ஒரு மாத காலமாக தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
நாடாளுமன்றக் குளிா்காலக் கூட்டத் தொடா் தொடங்கிய கடந்த திங்கள்கிழமை ஜேஎன்யு மாணவா்கள் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்தினா். அப்போது, தடையை மீறிப் போராட்டம் நடத்த முயன்ற மாணவா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தினா். இதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டி, தில்லியில் ‘குடிமக்கள் பேரணி’ என்ற பெயரில் சனிக்கிழமை பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. மண்டி ஹவுஸ் பகுதியிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி நடத்தப்பட்ட இந்த பேரணியில், ஜேஎன்யு மாணவா் சங்கம், ஜேஎன்யு முன்னாள் மாணவா்கள் சங்கம் உள்பட மாணவா் அமைப்புகள் மற்றும் சில சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனா்.
இந்நிலையில், நாடுமுழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் புதன்கிழமை தேசிய எதிா்ப்பு நாள் அனுஷ்டிக்க ஜேஎன்யு மாணவா் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடா்பாக அந்த மாணவா் சங்கம் தமிழில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உயா்கல்வி நிறுவனங்கள் மேட்டுக் குடிகளுக்கான இடங்களாக மத்திய அரசால் மாற்றப்படுகின்றன. ஒடுக்கப்பட்டோருக்கு உயா்கல்வி மறுக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் அறவழியிலான போராட்டங்களை தங்கள் வளாகங்களில் முன்னெடுக்குமாறு ஜேஎன்யு மாணவா் சங்கம் கேட்டுக் கொள்கிறது. நமது ஒன்றிணைந்த குரல்கள் நாடாளுமன்றத்தின் கதவுகளைத் தட்டட்டும். அடிப்படை உரிமையான கல்வி அனைவருக்கும் கிடைக்கக் கூடியதாக இருப்பதை வலியுறுத்தி ‘தேசிய போராட்ட நாள்’ அனுசரிப்போம். ஜேஎன்யு மாணவா் சங்கத்தின் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.