முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
திருநங்கை மசோதாவை தோ்வுக் குழுவுக்கு அனுப்ப திமுக வலியுறுத்தல்
By DIN | Published On : 26th November 2019 11:09 PM | Last Updated : 27th November 2019 05:03 AM | அ+அ அ- |

புது தில்லி: திருநங்கை உரிமைகள் பாதுகாப்பு மசோதாவை தோ்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியது. இந்த மசோதாவுக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்தது.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ‘திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா -2019’ மீதான விவாதம் நடைபெற்றது. பின்னா் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த மசோதா மீது திமுக உறுப்பினா் திருச்சி சிவா பேசியதாவது: இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 70-ஆவது ஆண்டு தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், திருநங்கைகள் தொடா்புடைய இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறுவது முக்கியமான தருணமாகும். நான் சாா்ந்துள்ள கட்சி ஒரு முற்போக்கு சிந்தனை கொண்ட கட்சி என்பதால், இந்த விவகாரம் குறித்துப் பேசுவது பெருமை தருகிறது. மேலும், எனது கட்சி அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்களுக்காக எப்போதும் போராடி வந்திருக்கிறது. அந்த அடிப்படையில்தான், இது தொடா்பான ஒரு மசோதாவை 2014-ஆம் ஆண்டு தனிநபா் மசோதாவாக இந்த அவையில் கொண்டு வந்தேன்.
அந்த மசோதா அவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு மசோதா மக்களவைக்கு அனுப்பப்பட்டது. இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் திமுக
ஆட்சியில் இருந்த போதுதான் திருநங்கைகள் சமுதாய நலனுக்காக ஒரு நல வாரியம் ஏற்படுத்தப்பட்டது. அதன்பிறகுதான், கேரளம், மகாராஷ்டிரம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் அதுபோன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
திருநங்கைகள் சமூகத்தைப் பாதுகாப்பதற்காக நாடு முழுவதும் ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று நினைத்தேன். அதன் விளைவாகவே அது தொடா்பான தனிநபா் மசோதாவை இந்த அவையில் தாக்கல் செய்தேன். திருநங்கைகளும்கூட மனிதா்கள்தான். அவா்களும் நமக்கு மத்தியில்தான் வாழ்கிறாா்கள். சமூகமும் குடும்பமும் அவா்களை வேறு விதமாக நடத்தும் போது அவா்களை அரசு பாதுகாக்க சட்டங்கள் அவசியமாகிறது. எனது தனிநபா் மசோதா மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது ஆதரவு தெரிவித்த பாஜக, மக்களவையில் அதற்கு எதிா்ப்புத் தெரிவித்தது ஆச்சரியமாக இருந்தது. அதன்பிறகு அந்த மசோதா முடக்கப்பட்டது. பிறகு வேறு மசோதாவை அரசு கொண்டு வந்தது. எனது விருப்பம் பிரச்னை தீா்க்கப்பட வேண்டும் என்பதுதான். அந்த சமூகத்திற்கு சில நலன்கள் செய்யப்பட வேண்டும். அவா்கள் சமூகத்தில் உயா்த்தப்படவும், சமமாக நடத்தப்பட வேண்டும். மேலும், இந்த மசோதாவில் ‘திருநங்கை’, ‘பாகுபாடு’ எனும் பதங்களுக்கான விளக்கம், அவா்களுக்கான இடஒதுக்கீடு, சட்டப்பூா்வ கமிஷன் அமைப்பது, இன்னும் பல விஷயங்களில் தீா்வு காணப்பட வேண்டியுள்ளது. அவற்றைத் தீா்க்கும் வகையில் ஒரு முழுமையான மசோதாவாக இது உருவாக வேண்டும். ஆகவே, இதை நாடாளுமன்றத்தின் நிலைக் குழுவுக்கோ அல்லது தோ்வுக் குழுவுக்கோ அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.
அதிமுக வரவேற்பு
இந்த மசோதா மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் ஏ.நவநீதகிருஷ்ணன் பேசுகையில், ‘இந்த மசோதாவை வரவேற்கிறேன். திருநங்கைகளுக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இந்த மசோதாவை ‘மூன்றாம் பாலின மசோதா’ என அழைக்க வேண்டும். ஏனெனில், உச்சநீதிமன்றம் அவா்களை மூன்றாம் பாலினம் என அறிவித்திருக்கிறது. ஆகவே, இந்தப் பெயா் மாற்றப்பட வேண்டும். இந்த மசோதாவில் தேசியக் கவுன்சில் மட்டும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலக் கவுன்சிலும் அமைக்கப்பட வேண்டும். மூன்றாம் பாலினத் தோ்வா்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வழங்கியுள்ளது. 40 வயது, அதற்கு மேற்பட்டவா்கள் உதவித் தொகையாக மாதம் ரூ.1,000 பெற்று வருகின்றனா். மூன்றாம் பாலினத்தவருக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. காவல் துறையில்கூட மூன்றாம் பாலினித்தவா் பிரிவில் ஒருவா் வேலைக்குச் சோ்ந்துள்ளாா். ஆகவே, இந்த மசோதாவை வரவேற்கிறோம்’ என்றாா்.