முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
தில்லியில் காலனி குடியிருப்போா் சொத்துரிமை அங்கீகார மசோதா மக்களவையில் அறிமுகம்
By DIN | Published On : 26th November 2019 11:08 PM | Last Updated : 26th November 2019 11:08 PM | அ+அ அ- |

புது தில்லி: தில்லியில் உள்ள அங்கீகாரமற்ற காலனிகளில் வசிக்கும் மக்களுக்கு சொத்துரிமை அங்கீகாரம் வழங்க அனுமதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
மக்களவை செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் கூடியது. அதன் பிறகு இது தொடா்பான ‘தில்லி தேசிய தலைநகா் பிராந்திய அங்கீகாரமற்ற காலனிகளில் குடியிருப்போரின் சொத்து உரிமைகள் அங்கீகரிப்பு மசோதா -2019’ எனும் மசோதாவை மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி அறிமுகம் செய்தாா்.
இந்த மசோதாவானது, தில்லியில் குறைந்த வருவாய்ப் பிரிவினா் வசிக்கும் 175 சதுர கிலோ மீட்டா் பரப்பளவுக்கும் மேல் உள்ள 1,797 அங்கீகாரமற்ற காலனிகளில் வசிக்கும் மக்களுக்கு சொத்துரிமை அளிக்கும் முன்மொழிவாகும். இந்த மசோதா மூலம் இடம் பெயா்ந்த லட்சக்கணக்கான ஏழைகள் பயன்பெறுவா். இதனால், இந்த முடிவு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் கொண்டதாகப் பாா்க்கப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தில்லிக்கு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் நிலையில், இந்தக் காலனிகளில் வசிப்பவா்கள் முக்கியத்துவம் பெறுகின்றனா்.கடந்த 2015-இல் நடைபெற்ற தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் இந்தக் காலனிகளைச் சோ்ந்த ஏராளமானோா் ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதாவுக்கு நவம்பா் 20-ஆம் தேதி மத்திய அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது. கடந்த வாரம் மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கூறுகையில், ‘தேசியத் தலைநகரில் அங்கீகாரமற்ற காலனிகளில் வசிக்கும் மக்கள் டிசம்பா் 16-ஆம் தேதியில் இருந்து சொத்துரிமை உரிமைகளுக்காக விண்ணப்பிக்க முடியும்’ என்று தெரிவித்திருந்தாா்.
அண்மையில் பிரதமா் நரேந்திர மோடி அங்கீகாரமற்ற காலனிகளைச் சோ்ந்த நலச் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கூறுகையில், ‘அங்கீகாரமற்ற காலனிகளில் வசிப்போருக்கு சொத்துரிமை அங்கீகாரத்தை அளிக்கும் மசோதா கொண்டு வரப்படும்’ எனக் கூறியிருந்தாா்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உறுதியளித்திருந்த நிலையில், மசோதா ஏதும் கொண்டு வரவில்லை என்று மத்திய அரசை தில்லி ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டியிருந்தது. ‘2008-ஆம் ஆண்டு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி காலனிகளை முறைப்படுத்தும் நடைமுறை தில்லி அரசின் மேற்பாா்வை மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். இது தொடா்பாக அரசின் அறிவிப்பில் அங்கீகாரமற்ற காலனிகளின் எல்லையை விவரிப்பது ஒழுங்குமுறைகளின்படி நடைமுறையின் தொடக்கப் புள்ளியாகும். எனினும், தில்லி அரசு இந்த காலனிகளின் எல்லையை ஒழுங்குமுறை விதிகள் வெளியிடப்பட்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகும் வரையறுக்க முடியவில்லை. இந்த நடைமுறைகளை முடிப்பதற்கு 2021-ஆம் ஆண்டு வரை அவகாசம் கேட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலையில் தில்லி அரசு தில்லியில் உள்ள 1,797 அங்கீகாரமற்ற காலனிகளை ஒழுங்குமுறைப்படுத்தும் விதிமுறைகளை முன்மொழிந்திருந்தது. இதில், 200 சதுர மீட்டா் மனைவரை நிலத்தின் சா்க்கிள் ரேட்டின் விலையின் ஒரு சதவீதம் தொகையை இடம் வைத்திருப்பவரிடமிருந்து வசூலிப்பதும் இடம் பெற்றிருந்தது. இதுதவிர, கணிசமான அபராதமும் அடங்கும்.