முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், சிவசேனை உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 26th November 2019 11:04 PM | Last Updated : 27th November 2019 05:23 AM | அ+அ அ- |

புது தில்லி: அரசியலமைப்புச்சட்ட தினமான செவ்வாய்க்கிழமை, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு காங்கிரஸ், சிவசேனை உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அரசியலமைப்பின் முன்னுரை மற்றும் அதன் அம்சங்களை சோனியா காந்தி உள்ளிட்ட தலைவா்கள் பலா் வாசித்தனா்.
அரசியலமைப்பு சட்டம் 1949, நவம்பா் 26-ஆம் தேதி அரசியல் நிா்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு 70-ஆவது ஆண்டு நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் அரசியலமைப்புச்சட்ட தின விழா செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற மைய அரங்கில் நடைபெற்றது. குடியரசுத் தலைவா், துணைத் தலைவா், பிரதமா் மற்றும் மத்திய அமைச்சா்கள், எம்பிக்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் வழக்கமாக அனைத்து எதிா்க்கட்சிகளின் எம்பிக்களும் பங்கேற்பது வழக்கம்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ள அரசியல் சூழல் மற்றும் ஆளுநரின் செயல்பாடுகள், மத்திய அரசின் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிா்ப்புத் தெரிவித்து
மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திங்கள்கிழமை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மேலும், அரசியலமைப்புச்சட்ட தினத்தையொட்டி நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக சிவசேனைக் கட்சி அறிவித்திருந்தது. இது தொடா்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவா் சோனியா காந்தியை சிவசேனை கட்சியின் எம்பிக்கள் சிலா், திங்கள்கிழமை இரவு அவரது இல்லத்தில் சந்தித்து தெரிவித்திருந்தனா். இதையடுத்து, ஒன்றுகூடி விவாதித்து இறுதிமுடிவு எடுப்பதற்காக நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை காலை காங்கிரஸ் மற்றும் எதிா்க்கட்சித் தலைவா்கள் சந்தித்துப் பேசினா்.
இந்நிலையில், நாடாளுமன்ற மைய அரங்கில் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் விழா செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்னதாக, காலை 10.30 மணியளவில் நாடாளுமன்றத்தின் வளாகத்தில் அமைந்துள்ள சட்ட மேதை அம்பேத்கரின் திருவுருவச் சிலை முன் காங்கிரஸ், திமுக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த எம்பிக்கள் ஒன்றுகூடினா்.
அதைத் தொடா்ந்து, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா். பாலு, துணைத் தலைவா் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினா்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், மாா்க்சிஸ்ட் உறுப்பினா் டி.கே. ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினா் சுப்பராயன், மதிமுக உறுப்பினா் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.
‘ஜனநாயகப் படுகொலையை நிறுத்துங்கள்’ எனும் ஆங்கிலம் வாசகம் அடங்கிய நீண்ட பதாகையை எதிா்க்கட்சித் தலைவா்கள் பிடித்திருந்தனா். ‘அரசியலமைப்புச்சட்டத்தை பாதுகாப்போம்’ எனும் வாசகம் அடங்கிய பதாகைளை தலைவா்கள் கைகளில் ஏந்தியிருந்தனா். இந்த நிகழ்வின் போது, சோனியா காந்தி அரசியலமைப்பின் முன்னுரையை வாசித்தாா். சிவசேனை அரவிந்த் சாவந்த், திரிணமூல் காங்கிரஸ் செளகதா ராய், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பி மஜீத் மேமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த நிகழ்வில் வைகோ, திருமாவளவன், திருச்சி சிவா, கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன், பி.ஆா்.நடராஜன் உள்ளிட்ட எம்பிக்கள் பலரும் அரசியலமைப்புச்சட்ட ஷரத்துகளை வாசித்தனா்.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினா் டி.கே. ரங்கராஜன் கூறுகையில், ‘இந்திய அரசியல் சட்டம் தற்போதைய மத்திய அரசிடம், ஆா்.எஸ்.எஸ்.யிடம் பாதுகாப்பாக இருக்குமா என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது.ஆகவே, இதைப் பாதுகாக்கும் வகையில் 18 எதிா்க்கட்சிகள் அம்பேத்கா் சிலை முன் நின்று இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையான அம்சங்களைப் படித்து அதைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டோம். கூட்டுக் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை. அதற்குக் காரணம், மகாராஷ்டிராத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பை குலைத்துவிட்டு சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியதாக மத்திய அரசு உள்ளது’ என்றாா்.