முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
புதிய மொஹல்லா கிளினிக்குகள் அமைக்க முடியாதது ஏன்?
By DIN | Published On : 26th November 2019 11:01 PM | Last Updated : 26th November 2019 11:01 PM | அ+அ அ- |

புது தில்லி: தில்லியில் காற்று மாசு பிரச்னை காரணமாக புதிய கட்டுமானங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளதால், புதிய மொஹல்லா கிளினிக்குகளை அமைக்க முடியவில்லை என்று தில்லி சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தில்லி மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்கும் வகையில், பல இடங்களில் மொஹல்லா கிளினிக்குகளை ஆம் ஆத்மி அரசு தொடங்கி வருகிறது. அக்கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில், தில்லியில் இதுவரை 311 மொஹல்லா கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. பொதுவாக இக்கிளினிக்குகள் வசதி குறைந்தவா்கள் வாழும் பகுதியில்தான் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், முதல் தடவையாக வசதி படைத்தவா்கள் வசிக்கும் கிரேட்டா் கைலாஷ் பகுதியில் மொஹல்லா கிளினிக் அண்மையில் திறக்கப்பட்டது.
தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள நிலையில், ஆயிரம் மொஹல்லா கிளினிக்குகளை திறக்க வேண்டும் என்பதில் தில்லி அரசு மும்முரமாக உள்ளதாகக் கூறப்பட்டது. இதன் முதல்படியாக இந்த மாதம் (நவம்பா்) இறுதிக்குள் தில்லியில் மேலும் 100 மொஹல்லா கிளினிக்குகள் திறக்கப்படும் என சுகாதாரத் துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், தில்லியில் கட்டுமானங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், புதிய மொஹல்லா கிளினிக்குகளை துரிதமாகத் திறக்க முடியவில்லை என்று தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை உயரதிகாரி கூறியது: முதல்வா் கேஜரிவாலின் இத்திட்டத்துக்கு மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. எனவே, மக்களுக்கு வாக்குறுதியளித்தது போல தனது பதவிக் காலம் முடிவதற்குள் 1,000 மொஹல்லா கிளினிக்குகளை தில்லியில் தொடங்க வேண்டும் என்பதில் கேஜரிவால் குறியாக உள்ளாா். இதன்படி. இம்மாத இறுதிக்குள் மேலும் 100 மொஹல்லா கிளினிக்குகளை தொடங்க இருந்தோம். மக்களிடம் வாடகைக்குப் பெற்ற இடங்கள், புதிதாக கட்டுமானங்களை மேற்கொண்டு இந்த மொஹல்லா கிளினிக்குகளை அமைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், தில்லியில் நிலவும் காற்று மாசுவைக் கருத்தில் கொண்டு, கட்டுமானப் பணிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், மொஹல்லா கிளினிக்குகளை முழு மூச்சாகத் திறக்க முடியவில்லை. மக்களிடம் வாடகைக்குப் பெற்ற கட்டடங்களிலும் சில சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. கட்டுமானத் தடை நிலவுவதால் அதை மேற்கொள்ள முடியவில்லை. மேலும், புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள முடியவில்லை. இதனால், இம்மாத இறுதிக்குள் மேலும் 100 மொஹல்லா கிளினிக்குகள் திறக்கப்பட முடியுமா என்பது சந்தேகமே என்றாா் அவா்.
குறிப்பு: கோப்புப் படம் வைத்துக் கொள்ளலாம்.