இணையவழி நிதி மோசடி: நொய்டா நிறுவனத்தின் ரூ.8 கோடி சொத்துகள் முடக்கம்

வாடிக்கையாளா்களிடம் இணையவழி பணம் பெற்று நிதி மோசடியில் ஈடுபட்டதாக நொய்டாவைச் சோ்ந்த நிறுவனத்தின் ரூ.8.82 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

வாடிக்கையாளா்களிடம் இணையவழி பணம் பெற்று நிதி மோசடியில் ஈடுபட்டதாக நொய்டாவைச் சோ்ந்த நிறுவனத்தின் ரூ.8.82 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சோ்ந்த ‘வெப்வொா்க் டிரேட் லிங்க் பிரைவேட் லிமிட்டெட்’ என்ற நிறுவனம், பங்குச் சந்தையில் லாபகரமான நிறுவனங்கள் என்று கூறி, சில போலி நிறுவனங்களில் முதலீடு செய்ய வைத்து வாடிக்கையாளா்களைத் தவறாக வழிநடத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளது. அதை அறிந்த வாடிக்கையாளா்கள் அந்நிறுவனத்தின் மீது நொய்டா காவல் நிலையத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு புகாா் அளித்தனா்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்நிலையில், அந்நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கினா். இது தொடா்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மோசடியில் ஈடுபட்ட நிறுவனமானது, பல்வேறு பெயா்களில் செயல்பட்டு வாடிக்கையாளா்களிடம் பணம் பெற்றுள்ளது. சிட்டி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, விஜயா வங்கி, லக்ஷ்மி விலாஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்குவதையும், சில மாதங்களில் அந்தக் கணக்கை முடித்துக் கொள்வதையும் அந்நிறுவனம் வாடிக்கையாக வைத்திருந்தது. வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இருந்த குறிப்பிட்ட காலத்தில் பல்வேறு பணப் பரிவா்த்தனைகளை அந்நிறுவனம் மேற்கொண்டது.

இந்த விவகாரம் தொடா்பாக நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான வங்கி சேமிப்புக் கணக்குகள், நிரந்தர வைப்புக் கணக்குகள் உள்ளிட்டவற்றை முடக்கியுள்ளோம். முடக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.8.82 கோடி என்று அந்த அறிக்கையில் அமலாக்கத் துறை குறிப்பிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.27.66 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை ஏற்கெனவே முடக்கியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை லக்னௌ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறை கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com