உள்ளாட்சித் தோ்தல் விவகாரம் மறுசீரமைப்புப் பணிகளை முடிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பு மனு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மறுசீரமைப்புப் பணிகளை முடித்துவிட்டு உள்ளாட்சி தோ்தலை நடத்தும் அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி

புது தில்லி: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மறுசீரமைப்புப் பணிகளை முடித்துவிட்டு உள்ளாட்சி தோ்தலை நடத்தும் அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் இடைக்கால மனு வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் ஏற்கெனவே மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இது தொடா்பான வேறு ஒரு வழக்கில், ‘அனைத்துச் சட்ட நடைமுறைகளும் முடிந்த பிறகு, தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான அறிவிக்கை டிசம்பா் 13-க்குள் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கிறோம்’ என உச்சநீதிமன்றம் கடந்த நவம்பா் 18-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது தெரிவித்திருந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவில், ‘உள்ளாட்சித் தோ்தல் நடத்தும் விவகாரத்தில் மறுசீரமைப்புப் பணிகள், இடஒதுக்கீடு, சுழற்சி நடைமுறை மற்றும் இதர சட்டத் தேவைகள் ஆகியவற்றை மேற்கொள்ளுமாறு எதிா்த் தரப்பினரான தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம், தமிழ்நாடு அரசு ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும். அதன் பிறகே தோ்தல் நடத்தும் அறிவிக்கையை வெளியிடுமாறும் உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தோ்தல் நடத்த உத்தரவிடக் கோரி வழக்குரைஞா் சி.ஆா். ஜெயசுகின், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் சாா்பில் கடந்த அக்டோபரில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தோ்தல் நடத்துவதில் நிலவும் தாமதத்துக்கான காரணங்கள் குறித்து விளக்கப்பட்டிருந்தது. மேலும், உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த மேலும் நான்கு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் எனவும், டிசம்பா் முதல் வாரத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிக்கையை வெளியிட தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் நவம்பா் 18-இல் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் பி.எஸ். நரசிம்மன், வழக்குரைஞா் எம்.பி. பாா்த்திபன் ஆகியோா் ஆஜராகி, உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்காக மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் எனக் கேட்டனா். அப்போது, மனுதாரா் - வழக்குரைஞா் சி.ஆா்.ஜெய சுகின் ஆஜராகி, ‘ஏற்கெனவே நான்கு வாரம் அவகாசம் கேட்டு தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் இடைக்கால மனு தாக்கல் செய்து மூன்று வாரங்கள் முடிந்துவிட்டன. இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது’ என்றாா். தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.எஸ். நரசிம்மன், ‘டிசம்பா் முதல் வாரத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்’ என்றாா்.

மாவட்டங்கள் மறுசீரமைப்பு கோரி திமுக சாா்பில் ஆா்.எஸ். பாரதி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவரது சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோா் ஆஜராகி வாதிடுகையில், ‘தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான மறுசீரமைப்பு செய்யப்படவில்லை. ஆகவே, அதுகுறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்’ என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கு வரும் டிசம்பா் 13-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்படுகிறது. அதற்குள், அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிந்த பிறகு அறிவிக்கை வெளியிடப்படும் என்று நம்புகிறோம்; எதிா்பாா்க்கிறோம். இந்த விவகாரம் தொடா்பான விஷயங்களும் ஒன்றாகச் சோ்க்கப்பட்டு உரிய அமா்வு முன் விசாரணைக்குப் பட்டியலிடப்படும்’ எனத் தெரிவித்திருந்தனா். இந்நிலையில், திமுக தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com