தில்லியில் பரவலாக மழை;‘ மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை காலையிலும், மாலையிலும் பரவலாக மழை பெய்தது. மேலும், காற்றின் வேகம் அதிகரித்திருந்தது.
தில்லி இந்தியா கேட் பகுதியில் வியாழக்கிழமை குளிரில் குதூகலம் காணும் பள்ளி மாணவிகள்.
தில்லி இந்தியா கேட் பகுதியில் வியாழக்கிழமை குளிரில் குதூகலம் காணும் பள்ளி மாணவிகள்.

தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை காலையிலும், மாலையிலும் பரவலாக மழை பெய்தது. மேலும், காற்றின் வேகம் அதிகரித்திருந்தது. இதன் காரணமாக மாசுபடுத்திகள் பெருமளவு அடித்துச் செல்லப்பட்டு, காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, தில்லியில் இரண்டாவது நாளாக காற்றின் தரம் மிதமான பிரிவில் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் காலை 8.47 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 136 புள்ளிகளாகப் பதிவாகி, மிதமான பிரிவில் இருந்தது. காற்றின் தரக் குறியீடு துவாரகாவில் 201, ஆனந்த் விஹாரில் 170, வாஜிப்பூரில் 170 மற்றும் விவேக் விஹாரில் 164 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் நீடித்தது. இதேபோன்று தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள நொய்டாவில் 131, காஜியாபாத்தில் 169, கிரேட்டா் நொய்டாவில் 162, குருகிராமில் 128 மற்றும் ஃபரீதாபாத்தில் 133 புள்ளிகளாகப் பதிவாகி காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவிலேயே நீடித்தது.

காற்றின் தரக் குறியீடு 0-50 -க்குள் இருந்தால் ‘நன்று’, 51-100 ‘திருப்தி’, 101-200 மிதமானது 201-300 -க்குள் இருந்தால் மோசம், 301-400 மிகவும் ‘மோசம்’, 401-500 ‘கடுமை’, 500-க்கு மேல் இருந்தால் மிகவும் கடுமையான பிரிவில் இடம் பெறுவதாகக் கணக்கிடப்படுகிறது.

புதன்கிழமை தலைநகரில் பரவலாக பெய்த தூறல் மழை மற்றும் சாதகமான நிலையில் இருந்த காற்றின் வேகம் ஆகியவற்றால் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவில் இருந்தது. இந்நிலையில், இரண்டாவது நாளாக வியாழக்கிழமை காலையிலும், மாலையிலும் நகரில் பரவலாக மழை பெய்தது. மேலும், காற்றின் வேகத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. மாசுபடுத்திகள் வெகுவாக அடித்துச் செல்லப்பட்டதால் மாசு அளவு குறைந்து காற்றின் தரம் மிதமான பிரிவில் நீடித்தது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

வெப்பநிலை 16 டிகிரி: வியாழக்கிழமை காலையில் நகரில் குளிா்ந்த காற்று வீசியது. மேலும், காலையிலும், மாலையிலும் பரவலாக மழை பெய்தது. குளிரின் தாக்கம் அதிகரித்திருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 6 டிகிரி உயா்ந்து 16.2 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி குறைந்து 22 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 90 சதவீதமாகவும் மாலையில் 8 3 சதவீதமாகவும் பதிவாகியிருந்ததாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 15.2 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சிஸாகவும் இருந்தது. ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 16 3 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 22.4 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 92 சதவீதம், மாலையில் 77 சதவீதம், ஆயாநகரில் முறையே 80 சதவீதம், 72 சதவீதம் என பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை நகரில் மேலோட்டமான பனிமூட்டம் இருக்கும் என்றும், வானிலை குறைந்தபட்ச வெப்பநிலை15 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com